நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்ற வதந்திகளை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

dissolutionபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பார் எனப் பரவியுள்ள வதந்திகளை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது.

அந்த வதந்திகள் ‘முழுக்க முழுக்க உண்மையில்லாதவை’ என அந்த அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில்
(@PMOMalaysia) தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் நஜிப் ரசாக் இன்று நண்பகல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவிப்பார் என்ற வதந்தி முற்றிலும்  உண்மையில்லாதது,” என்றும் அது தெரிவித்தது.

dis1இன்று நண்பகல் பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவித்து விட்டார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது தங்களுக்கு கிடைத்துள்ள வதந்திகளை உறுதி செய்வதற்கு பொது மக்கள் மலேசியாகினி நிருபர்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பொருளாதார உருமாற்றத் திட்டம், அரசாங்க உருமாற்றத் திட்டம் ஆகியவற்றின் விளைவுகள நேற்றிரவு நாட்டு  மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று
கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் மார்ச் 26ம் தேதி கலைக்கப்பட வேண்டும்.

dis2மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு முன்னதாக 13வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என
பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 25ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆரூடம் கூறியுள்ளார்

என்றாலும் மார்ச் 25க்கு ஐந்து நாட்கள் முன்னர் அல்லது பின்னர் கலைக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் லிம்  சொன்னார்.

ஆளும் கூட்டரசு அரசாங்கத்தின் தவணைக் காலம் ஏப்ரல் 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. அந்தத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மாநிலத் தேர்தல்களையும் கூட்டரசுத் தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TAGS: