இசி: ஆர்சிஐ நிறைவுக்கு வரும் முன்னர் பொதுத் தேர்தல் வருவது துரதிர்ஷ்டமானது

wanசபா குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் தனது பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னர் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படவிருப்பது ‘துரதிர்ஷ்டமானது’ என தேர்தல் ஆணையம் (இசி)  கூறுகிறது.

ஏனெனில் அந்த விசாரணை முடிவில் மட்டுமே அது வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும்  நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார்.

“வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்யும் அதிகாரம் தேர்தல் விதிமுறைகள் பதிவின் கீழ் எங்களுக்கு உள்ளது.   முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் -ஆர்சிஐ நீதிமன்றத்தைப் போன்றது தான் –  நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.”

“ஆர்சிஐ நிறைவடைவதற்கு முன்னர் தேர்தல் வந்தால் எத்தனை போலி வாக்காளர்கள் அது மிகவும் துரதிர்ஷ்டமானது,” என வான் அகமட் நேற்றிரவு மலேசிய அந்நியப் பத்திரிக்கையாளர் மன்ற விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆர்சிஐ சாட்சியங்கள் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை இசி சோதிக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

“ஆர்சிஐ-யில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே நமக்கு இப்போது தெரியும். உண்மையில் நாங்களும் அதனை அறிய விரும்புகிறோம். காரணம் போலி வாக்காளர்களைக் கண்டு பிடிப்பது எங்கள் வேலையாகும்.”

“ஆனால் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று ஒருவர் அதனைச் சொல்லலாம். இன்னொரு நாள் மற்ற சாட்சிகள் வேறு விதமாகச் சொல்லக் கூடும்,” என வான் அகமட் குறிப்பிட்டார்.

ஆர்சிஐ கண்டு பிடிப்புக்கள் மீது கருத்துச் சொல்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை என வலியுறுத்திய அவர், மொத்தமுள்ள 250 சாட்சிகளில் 30 விழுக்காட்டினர் மட்டுமே இது வரையில் சாட்சியமளித்துள்ளதாக சொன்னார்.

ஆர்சிஐ-யின் தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் வரையில் அது செயல்படும் என கடந்த புதன் கிழமை அறிவிக்கப்பட்டது. அது தனது விசாரணைகளை இன்று மார்ச் 21ம் தேதியுடன் முடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

TAGS: