‘தண்டா புத்ரா’ UIA குவாந்தான் வளாகத்தில் காட்டப்படும்

tandaசர்ச்சைக்குரிய மே 13 திரைப்படமான ‘தண்டா புத்ரா’ UIA எனப்படும் அனைத்துலக இஸ்லாமியப்  பல்கலைக்கழகத்தின் குவாந்தான் வளாகத்தில் நாளை இரவு மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் காட்டப்படும்.

தண்டா புத்ரா திரையிடப்படுவதற்கு அந்த வளாகத்தின் இயக்குநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதை அந்தப்
பல்கலைக்கழக மாணவர் சேவைப் பிரிவு இன்று உறுதிப்படுத்தியது.

“அது ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டும் ரகசியமாகத் திரையிடப்படும்,” என பெயர் தெரிவிக்க
விரும்பாத ஒர் அதிகாரி சொன்னார்.

அந்த வளாகத்தில் உள்ள முக்கிய மண்டபத்தில் அது திரையிடப்படும் என அவர் மலேசியாகினி தொடர்பு
கொண்ட போது தெரிவித்தார்.

அது திரையிடப்படுவதற்கான நோக்கம் பற்றி வினவப்பட்ட போது அதற்குப் பதில் அளிக்க அந்த அதிகாரி
மறுத்து விட்டார். அது தம்முடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்றார் அவர்.

மார்ச் 9ம் தேதி UIA கோம்பாக் வளாகத்தில் தண்டா புத்ரா திரையிடப்பட்ட பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி
நடைபெற்றது. அது போன்று குவாந்தானிலும் நிகழுமா எனத் தொடுக்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதில் தர
மறுத்து விட்டார்.

“மாணவர்ளை ஈர்க்கும் நோக்கத்தை அது கொண்டுள்ளதா ?”

அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது குறித்து மஹாசிஸ்வா ஆதரவு UIA மாணவர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட ஒர் அரசியல் கூட்டணிக்கு ஆதரவாக மாணவர்களை ஈர்க்கும் முயற்சி அது என
அவர்கள் கருதுகின்றனர்.

13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அந்தத் திரைப்படம் அவசரம் அவசரமாகக் காட்டப்படுவது
சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என இஸ்லாத்துக்கு ஒன்றுபடுவோம் என்ற Wufi அமைப்பின் தலைவர் அப்துல்   முந்தாஹிம் அபு பாக்கார் கூறினார்.

“தேர்தல் நெருங்கும் போது அதனை ஏன் திரையிட வேண்டும் ? குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்குமாறு
மாணவர்களைத் திசை திருப்புவது அதன் நோக்கமா ?” என அவர் வினவினார்.

அமைச்சரவை அந்தத் திரைப்படத்தைத் தடை செய்துள்ள போதிலும் பெல்டா, UIA கோம்பாக் வளாகம்
ஆகியவற்றில் அது ரகசியமாக காட்டப்பட்டுள்ளது.

UIA கோம்பாக் வளாகத்தில் அது திரையிடப்பட்ட பின்னர் பேசிய பிரதமர் துறை முதுநிலை அதிகாரி ஒருவர்
பெர்சே போன்ற அரசு சாரா அமைப்புக்களையும் செய்தி இணையத் தளமான மலேசியாகினியையும் குறை
கூறினார்.