இன்று தாவாவ் உயர் நீதிமன்றத்தில் எட்டு பிலிப்பினோக்கள்மீது மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் அவர்கள் ஒரு பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டால் தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
நேற்று அந்த எண்மரும் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர். மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவர்கள்மீதான வழக்கை தாவாவ் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி விட்டது.
நீதிமன்றத்தைச் சுற்றிலும் வழக்கு முடியும்வரை பாதுகாப்பு பலமாக இருந்தது.
17-க்கும் 66-வயதுக்கும் உட்பட்ட அந்த எண்மர்மீது பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றவியல் சட்டத்தின் 121 ஆவது பகுதியின்கீழ் முதலில் குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாவதாக, அவர்கள் பயங்கரவாதக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றச்சாட்டு மலாய்மொழியில் வாசிக்கப்பட்டு பின்னர் அது பாஜாவ், சூலுக் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்குரைஞர்களுக்கு சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் தலைமை தாங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர் யார் என்பது தெரியவில்லை.
அவர்களுக்கான வழக்குரைஞர்களை அமர்த்தப்போவதுசட்டத்துறைத் தலைவரா, வழக்குரைஞர் மன்றமா, பிலிப்பீன்ஸ் அரசா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களே சொந்தத்தில் வழக்குரைஞர்களை வைத்துக்கொள்வார்களா என்பது வழக்கு ஏப்ரல் 12–இல் விசாரணைக்கு வரும்போது தெரியவரும்.
– பெர்னாமா