குற்றம் சாட்டப்பட்டவர்: லாஹாட் டத்துவில் சண்டையிட பணம் கொடுக்கப்பட்டது

1accuseதாவாவ் உயர் நீதிமன்றத்தில் சாபாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அதற்காக தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எண்மரில் ஒருவரான ஹூலாண்ட் கல்பி, பாஜாவ் மொழியில் பேசினார். அவர் சொன்னதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்த்துக் கூறினார்.

தான் செய்தது முட்டாள்தனம் என்பதை உணர்வதாகவும் அவர் சொன்னார். அதற்குமேல் அவர் பேசுவதை நீதிபதி பி.ரவீந்திரன்  தடுத்தார். அவர் எதிர்வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நீதிபதி, ஒரு வழக்குரைஞரை அமர்த்திக்கொண்ட பிறகே அவருடைய வாதம் பதிவு செய்யப்படும் என்றார்.

குற்றம்சாட்டப்பட்ட எண்மருக்கும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு விளக்கப்பட்டு அதற்குரிய தண்டனையும் விவரிக்கப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொருவரான திம்ஹார் ஹதிர், அனைத்துலகக் கடப்பிதழைப் பயன்படுத்தி கடந்த பிப்ரவரி மாதம் மலேசியா வந்ததாகத் தெரிவித்தார்.

அதற்குமேல் அவரையும் எதுவும் சொல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை.

1accuse1குற்றஞ்சாட்ட நபர்களில் மற்றொருவர் ஹபில் சுஹாய்லி. அவர் குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ள சிரமப்பட்டார்.  அவருக்குக் குற்றச்சாட்டு அவருடைய சூலுக் மொழியில் பலமுறை எடுத்துரைக்கப்பட்டது.

தாம் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றவர் வாதாடினார். இப்போது எதிர்வாதம் செய்ய வேண்டியதில்லை என்று அவரையும் நீதிபதி தடுத்தார்.

அத்திக் ஹுசேன் தம்மீதுள்ள குற்றச்சாட்டை விளக்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அவருக்கு பாஜாவ் மொழியில் குற்றச்சாட்டு என்னவென்பது விளக்கப்பட்டது. அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதுடன் பேரரசருக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட மற்ற நால்வரும்- லின் மாட் சாலே, பசாத் மனுவல், காடிர் உயுங், லதிங் தியோங் ஆகியோர்- சொல்வதற்கு எதுவும் இல்லை என்றனர்.

பசாத், பயங்கரவாதக் குற்றச்சாட்டுடன் பேரரசருக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

காடிரும் பதிங்கும் பயங்கரவாதக் கும்பலுக்குப் பாதுகாப்பு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் பிணை கிடையாது என்றும் கூறப்பட்டது.

நீதிமன்றத்துக்குச் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை போலீசார் மிகக் கவனமாகக் கண்காணித்தனர்.ஒரு செய்தி நிறுவனத்திலிருந்து ஒரு செய்தியாளருக்கு மட்டுமே நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.

வெளிநாட்டுச் செய்தியாளர்களை அங்கு காணவில்லை.

-பெர்னாமா