கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013
நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவளித்த வேளையில் மலேசிய சற்றும் தயக்கமற்ற நிலையில் நடுநிலை வகித்தது மலேசிய தமிழர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அந்தத் தீர்மானம், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற வகையில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல; ஆனால், அது இலங்கையின் அனைத்துலக ராஜதந்திர நகர்வுகளுக்குக் காட்டப்படும் எதிர்ப்பாகவே இருப்பதில்தான் பயன் உண்டு. மேலும், இந்தத் தீர்மானம் இலங்கையின் ஆதரவு நாடுகள் அல்லது நட்பு நாடுகளை அனைத்துலக நிலையில் அடையாளம் காட்டும் தன்மை வாய்ந்தது.
இந்தத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுப்பியம் பெற்றுள்ள 47 நாடுகள் பங்குகொண்டன. அதில் 25 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலையும் வகித்தன. இதில் ஜப்பானும் தென்கொரியாவும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதும், அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாகவும் சீனா எதிராகவும் வாக்களித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு தமது இனம் அருகாமையில் அழிக்கப்படுவதைக் கண்டிக்க மலேசியா முன்வர வேண்டும் என்பதாகும். அதற்காக நாம் நடத்திய அமைதி ஊர்வலங்களும் வழங்கிய மகஜர்களும் அரசாங்கத்திற்கு நமது ஏக்கத்தையும் எதிர்ப்பார்ப்பையும் போதுமான அளவு காட்டியிருக்கும்.
இது தேர்தல்காலம் என்பதால் இது போன்ற எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே இருந்ததில் தவறில்லை. மேலும் நமது பிரதமர் தன்னை மக்களின் பிரதமர் என நாள்தோரும் அறிமுகப்படுத்திக் கொள்வதால் அவருக்கு நமது ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் நன்றாகவே தெரிந்திருக்கும். அதோடு அண்மையக் காலங்களில் அனைத்து தமிழ் ஊடகங்களையும் உள்துறை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே, பக்கம் பக்கமாக நமது நாளிதழ்கள் இலங்கையின் இனப்படுகொலை பற்றியும் ஐ.நா. தீர்மானம் குறித்தும் வெளியிட்ட கோரிக்கைகளும் செய்திகளும் அரசாங்கத்திற்கு உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் தெரிந்திருக்கும். நாம் எதை ஒரு தார்மீக கடமையாக நமது அரசு செய்ய வேண்டும் என எதிர்ப் பார்த்தோமோ அதை செய்ய மலேசியா தவறி விட்டது.
மலேசியா தனது வெளியுறவு கொள்கையை இன-மதப்பாகுபாடு அற்ற வகையில் செயல்படுத்த தயங்குவது அதன் உண்மையான உள்நோக்கத்தைக் காட்டுவதாக அமைகிறது. அது தொடர்ந்து இலங்கையைத் தனது நட்பு நாடாகவே கருதுகிறது. அங்கு தமிழர்களின் இனப்படுகொலையென்பது அந்நாட்டின் இறையாண்மைக்கும் உள்நாட்டு விவகாரங்களுக்கும் உட்பட்டது எனபதை மலேசியா ஏற்று கொண்டுள்ளதையும் காட்டுகிறது.
இது போன்ற நிலைப்பாட்டை மலேசிய தமிழர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும். உலக அமைதியும், பிராந்திய அமைதியும் இதனால் சீர்குலையும். இனப்படுகொலையைக் கண்டிக்க மறுக்கும் அரசுகளும், அதை ஆதரிக்கும் அரசுகளும் அவ்வகையான கொடூர செயல்களைத் தங்கள் சொந்த நாடுகளில் ஈடேற்ற தயங்கமாட்டார்கள் என்கிற ஐயத்தை எழுப்புகிறது.
மலேசியாவின் இந்தப் போக்கு ஏற்கனவே நலிவுற்று இருக்கும் தேசிய முன்னணிக்கான தமிழர்களின் ஆதரவை மேலும் பலவீனப்படுத்தும்.
தேசிய முன்னணி என்றைக்குமே நம்மவர்களுக்கான எதிலும் அக்கறைகொள்ளாது -நம்மை எப்படியெல்லாம் மட்டம் தட்டமுடியுமோ அதற்கும் மேலாக அவன்கள் செய்வான்கள். நம்மிடையேதான் அவன்களுக்கு முத்தம் கொடுக்க ஆள் இருக்கிறதே.