புதிய ஆதாரம் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், பொய்யான சத்தியப் பிரமாணத்தை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் எனக் கூறப்படுவது மீது போலீஸ் புலனாய்வுகளை மீண்டும் தொடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் கூறுகிறார்.
அந்த விவகாரம் இன்னொரு வழியில் மறுபதிப்பாக வெளியானாலும் போலீஸ் அதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் இஸ்மாயில் சொன்னார்.
“புதிய ஆதாரத்தை மக்கள் கொண்டு வந்தால் நாங்கள் புலனாய்வு செய்வோம். ஆனால் பழைய கதை புதிய வடிவத்தில் சொல்லப்பட்டால் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம்,” என்றார் போலீஸ் தலைவர்.
அந்த விவகாரத்தைப் போலீசார் ஏற்கனவே விசாரித்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு (ஏஜி)அறிக்கை சமர்பித்து விட்டதை அவர் சுட்டிக் காட்டினார். போதுமான ஆதாரம் இல்லாததால் குற்றச்சாட்டுக்களைத் தொடருவதில்லை என ஏஜி அலுவலகம் முடிவு செய்துள்ளது.
“எங்களுக்குத் தெரியாத புதிய ஆதாரம் ஏதும் உங்களிடம் இருந்தால் கொண்டு வாருங்கள். நாங்கள் சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம். ஆனால் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேச வேண்டாம். அது ஒரே விஷயம் தான்,” என இஸ்மாயில் குறிப்பிட்டார்.
பாலசுப்ரமணியம் சார்பில் பொய்யான சத்தியப் பிரமாணத்தை வரையுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு பணித்ததை முதுநிலை வழக்குரைஞரான சிசில் அப்ரஹாம் ஒப்புக் கொண்டதாக பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக் சித்து மார்ச் 16ம் தேதி வழக்குரைஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதற்கு ஒரு நாள் முன்னதாக பாலசுப்ரமணியம் மாரடைப்பால் காலமானார்.
‘அது ஊழல் என்றால் எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல’
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டின் ஊழல், வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் எனக் கூறிக் கொள்ளும் அரசு சாரா அமைப்பான Global Witness-ன் வீடியோ குறித்துக் கருத்துரைத்த இஸ்மாயில், அந்த
விவகாரம் தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள எல்லா போலீஸ் புகார்களையும் ஆராயும் என்றார்.
அந்த விஷயம் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு (எம்ஏசிசி) அல்லது போலீஸுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்வதே அந்த ஆய்வின் நோக்கமாக இருக்கும்.
“நாங்கள் எல்லாப் போலீஸ் புகார்களையும் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் அதனை ஆராய்வோம். அது ஊழல் எனத் தெரிந்தால் அதனை புலனாய்வு செய்ய எம்ஏசிசி-யிடம் ஒப்படைத்து விடுவோம்.”
“எங்கள் அதிகாரங்கள் குழப்பமடைவதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என்றும் ஐஜிபி சொன்னார்.