பாதுகாப்புப் படைகள் லஹாட் டத்துவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகளின் இராணுவத் தளபதியை சிறைப் பிடித்துள்ளன. அவர் இன்று அதிகாலையில் செம்போர்ணாவில் கைது செய்யப்பட்டார்.
அந்த விவரங்கள் தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் வெளியிட்டார். 40 வயதான அந்த ஆடவர் தமது மனைவியுடன் சதுப்பு நிலப் பகுதி ஒன்றில் தகவல் கிடைத்த பின்னர் அதிகாலை மணி 1.30 வாக்கில் தடுத்து வைக்கப்பட்டார்.
பிப்ரவரி 12ம் தேதி கம்போங் தண்டுவோவில் பயங்கரவாதிகள் தரை இறங்கியது தொடக்கம் இன்று வரையில் அவர்களுக்கு எல்லா தேவைகளையும் வழங்கி வந்த உள்ளூர்வாசி ஒருவரையும் பாதுகாப்புப் படைகள் கைது செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
40 வயதான அந்த ஆடவர் கம்போங் தண்டுவோ-வில் நேற்றிரவு 10 மணி வாக்கில் கைது செய்யப்பட்டதாக காலித் தெரிவித்தார். அந்த ஆடவர் இப்போது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“ஊடுருவல் தொடங்கிய நாள் முதல் பயங்கரவாதிகளுக்குன் உணவுப் பொருள், குடி நீர், தங்கும் வசதிகள், போக்குவரத்து, மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்த தனி நபர் என அந்த உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.”
“அந்தத் தளபதியும் பயங்கரவாதிகளின் உள்ளூர் கைப்பாவையும் சிறைப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதக் கும்பல் முடக்கப்பட்டு விட்டதாக நான் நம்புகிறேன்,” என அவர் பெல்டா சஹாபாட் 16 பாதுகாப்புப் படை நடவடிக்கை தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.