நாங்கள் சமுதாயத்தைப் பற்றி தேர்தல் காலங்களில் மட்டும் சிந்திப்பதோ, செயல்படுவதோ இல்லை

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மார்ச் 23, 2013.

 

கடந்த வாரம் சிலாங்கூர் ம,இ காவின் காப்பார் நிகழ்வில் கலந்துகொண்டு கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மீண்டும் கூறியுள்ளார் என்று எனது அறிக்கையில் கூறியிருந்தேன். அந்த அறிக்கைக்கு நேற்றைய ( வெள்ளிக்கிழமை) பத்திரிக்கைகளில் எம். சரவணன்  பதில் அளித்துள்ளார். முதலில், ஒரே வாக்குறுதியை மீண்டும் மக்களிடம் கூறியது அரசியலா என்ற எனது அறிக்கையை வெளியிடாத தமிழ்ப் பத்திரிக்கைகளும் ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன் எனக்கு அளித்த பதிலை மட்டும் வெளியிட்டிருந்தன. அவர்களின் அக்கடப்பாடு மிக்க செயலுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. இருப்பினும், பிரசுரித்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி!

 

XavierJayakumarஅந்த இருட்டடிப்பின் வழி இன்னும் என் குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாத மக்களுக்கு விளக்கத்தை அளிக்க இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இது சம்பந்தமாக என்னை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட அந்தப் பத்திரிக்கை வாசகர்களின் நன்மைக்காக மீண்டும் சுருக்கமாகக் கூறுகிறேன்.

 

1. நம் சமுதாயம் விழிப்படைய வேண்டும், நாம் ஏமாளியாக இருந்தது போதும். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் காப்பாரில் மின்சுடலைக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும்  அளித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, பூச்சோங்கில் வழங்கிய  ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான  வாக்குறுதியும், 2010 ம் ஆண்டில் செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு வழங்கிய வாக்குறுதியும்  நிறைவேறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினேன்.

 

நீங்கள் பறைசாற்றுவது போன்று அக்கறை இருந்தால் இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை  நிறைவேற்ற 6 பிரதமர்களா ஆட்சிக்கு வர வேண்டும்? தமிழ்ப்பள்ளிகளின் தேவை இந்தியச் சமுதாயத்திற்கு  அவசரமானது. ஆனால் பிரதமர் அவரின் அரசியல் வாழ்வுக்கு எது  அவசியம்  என்று பார்த்துச் செயல்படுவதை  நிறுத்தி கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட போலித்தனங்களை இந்திய சமுதாயத்திற்கு  உணர்த்த வேண்டியது எனது கடமை மட்டுமல்ல அனைவரின் கடமையுமாகும்.

 

தமிழ்ப்பள்ளிகளின் முழு தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.  கடந்த தேர்தலில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மாநில அரசு எந்தத் தேர்தல் வாக்குறுதியும் அளிக்கவில்லை.  இருப்பினும், மக்களின் பாதிப்புகளுக்குத் தீர்வுக்கான வாய்ப்பு வசதிகள் கிடைத்தால்  அதனை  உடனடியாகப் பயன் படுத்திக்கொள்கிறோம்.

 

அது இச்சமுதாயத்தின்  மேன்மையில் நாங்கள் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது. அதனைத்தான்  நாங்கள் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி  நிர்மானிப்பில் காட்டினோம். அப்பள்ளியின் கட்டுமானத்தை ஒரே ஆண்டில்  முடித்தோம். இந்திய குத்தகையாளரைக் கொண்டு, சிக்கனமாக, சிறப்பான வேலைப்பாடுகளுடன் அப்பள்ளியைக் கட்டி முடித்தோம்.. இவை எல்லாம் எடுத்துக் காட்டுகளே.

 

நாங்கள் செய்ததனால் இன்று நாடு முழுவதிலும் இந்திய குத்தகையாளர்களுக்குத்  தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கான குத்தகை கிடைக்கிறதே! தமிழ்ப்பள்ளிகள்  கட்டுமானத்தில் இடைத்தரகர்கள் பெரிய கமிஷன் பெறுவதை மறைமுகமாக அம்பலப் படுத்தியுள்ள்ளோம். வாக்குறுதிகளை  விரைந்து செயல் படுத்தினால் மக்களுக்கே நன்மை. கடந்த காலங்களில்  அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்திய சமுதாயத்திற்கே இழப்பு.

 

அதனுடன் முழுக்க உங்கள் பொறுப்பிலுள்ள கூட்டரசு பிரதேசத்தில் இருக்கும் புக்கிட் ஜாலில் தோட்டத்தையும் கவனியுங்கள். அந்தத் தோட்ட நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதானே. அங்குள்ள தொழிலாளர்களுக்கு நான்கு ஏக்கர் நிலந்தானே  தேவைப்படுகிறது. அவர்களும்  எவ்வளவு காலத்துக்குப் போராடுவார்கள்.  அவர்கள் மீதும்  கொஞ்சம்  கரிசனம் காட்டுவாரா உங்கள் பிரதமர்? நீங்கள்தான் கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை அமைச்சராச்சே! ஏன் உங்கள்  பரிந்துரையை சிரமேல் கொண்டு பிரதமர் அமலாக்கமாட்டாரா?

 

இன்றைய புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு நிலப் பிரச்சனைக்கும் கடந்த காலத்தில் பாரிசான் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள்தானே காரணம். அவர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகளுக்கு, அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் பதில் சொல்ல வேண்டுமே! இன்று பிரதமர், எல்லாத் தொழிலாளர்களுக்கும் வீடு உண்டு என்கிறார், அது எப்படிப் பட்ட வீடு?  என்ன விலை? எங்கே என்று அவரிடம் நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் சுட்டி காட்டக் கூடாது என்றால். இந்தச் சமுதாயத்திற்கு யார்தான் வழி காட்டுவது?

 

தேர்தல் முடிந்தபின்  இன்றைய  பிரதமர்  வழங்கிய வெற்று வாக்குறுதிகளைப் பக்காத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வீர்களா?.நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும், நமக்கு நம்மவர்களின் முன்னேற்றம் முக்கியம், வாக்குறுதிகள் நம்மவர்களுக்குப் பயனைக் கொண்டு வரவேண்டும். இப்பொழுது உடனடியாக வீட்டைக் கட்ட முடியாது, ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் தொழிலாளர்களின் வீட்டுக்கான உத்தரவைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குப் பிரதமர் வழங்கி அதன்  நகலை மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள். மீத வேலையை நாங்கள் கவனிக்கிறோம், இந்த விஷயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயார். என்ன நீங்களும் உங்கள் பிரதமரும் தயாரா? நாள் குறிக்கத் தயாரா?

 

தமிழ்ப்பள்ளியில் கழிவறை கட்டுவது பிரதமரின் அக்கறையைக் காட்டுவதாகக் கூறுகிறீர்கள். சிலாங்கூர் பக்காத்தான்  ஆட்சியில் அவற்றை நாங்கள் ஏன் கட்டவில்லை  என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நாங்கள் தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பள்ளிகளுக்காகச் சிந்திப்பதோ, செயல்படுவதோ இல்லை.

 

முதலில் கல்வி மத்திய அரசின் முழு பொறுப்பு என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் எங்களின் தார்மீகக் கடமைகளிலிருந்து நாங்கள் ஒதுங்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள காப்பார் மெதடிஸ் தமிழ்ப்பள்ளிக்குப் பக்காத்தான் ஆட்சிக்காலத்தில் மட்டும் மாநில  அரசாங்க மானியமாக மட்டும் சுமார்  2 இலட்சம் ரிங்இகிட்டை வழங்கியுள்ளோம்.

 

 

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நாங்கள் வழங்கிய நிதியில் செய்துள்ள பணிகளில் ஒன்றாகக் கழிவறை மேம்பாடும் செய்து முடித்து அதற்கான கணக்கு அறிக்கையையும் அனுப்பியுள்ளது. மாநில முழுவதிலும்  43 பள்ளிகளுக்கு வழங்கியுள்ள கணினிக்கூடம் காப்பார் தமிழ்ப்பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது.  இவைகளை எல்லாம் செய்தும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தமிழ்ப்பள்ளிக்குத் தனது கடமையை முறையாக ஆற்றாத பாரிசான் பள்ளி கழிவறைக்குக்கூடத் தேர்தல் அறிக்கை விடுவது ஏன் என்று கேட்பதில் தவறில்லை.

 

ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் இந்த மாநிலத்தின் பொறுப்பு என்றால் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் கோலாலம்பூர் மாநகராட்சியின்  மானியமாக எத்தனை லட்சம் வாங்கித் தந்துள்ளார் என்று பட்டியலை மக்களுக்குக் காட்ட வேண்டும்.  உங்கள்  தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்குப் பேரா மாநில அரசின் மானியத்தை வாங்கித் தந்துள்ளீர்கள் என்ற பட்டியலை இங்குத் தந்தால் மக்கள் தீர்மானிக்கட்டுமே உங்கள் பாரிசானின் சாதனையை! தமிழ்ப்பள்ளிக்காக வழங்கியதாகக் கூறப்படும் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கே இன்னும் உங்கள் குடுமிபிடி சண்டைகள் ஓயவில்லை என்பதனையாவது ஒப்பு கொள்ளுங்கள்.

 

வார்த்தைக்கு வார்த்தை  இந்தியர் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு  55 ஆண்டுகள் ஆட்சி செய்வதை விட,  55 ஆண்டு ஆட்சிக்குப்பின்  இந்தியர்களைப் பொருளாதார பூஜியத்தில் வைத்திருப்பதை விட, இச்சமுதாயத்தின் சிறந்த வாழ்வுக்கு  வழி காட்டுவதே நலம். அதனைச் செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதைச் செய்ய முடியவில்லை என்றால் எங்கள் பதவிகளைத் தூக்கி வீசி விட்டு வெளியேறுவோம், அதற்கு  நிச்சயம் சமுதாயம் எங்களுக்குத் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதை துணை அமைச்சர் எம். சரவணன் கூடிய விரைவில் புரிந்து கொள்வார். .

 

 

TAGS: