தண்டா புத்ரா திரைப்படமும், அம்னோவின் இனவாதமும்!

tp1கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 24.03.2013

மே 13 இனக்கலவரமும், புக்கிட் கெப்போங் தாக்குதலும் அம்னோவுக்குத் தேவை. ஆனால் கம்போங் மேடான் வன்முறை மூடி மறைக்கப்பட வேண்டும்.

1969 மே 13 இனக்கலவரத்தை பற்றி கடந்த ஆண்டு வெளிவந்த தண்டா புத்ரா என்ற மலாய்ப்படம் தற்போது மலாய்க் காரர்களுக்கும் மலாய்க்கார இளைஞர்களுக்கும் மட்டுமே காட்டப்படுகிறது. இது தேர்தலுக்கு மலாய்க்காரர்களின் வாக்குகளைக்  கவர அம்னோவின் யுக்தியா என்ற வினா எழுகிறது.

அதுதான் காரணம் என்றால் இது அம்னோவின் இனவாத வெறித்தனத்தைக்  காட்டுவதோடு ஒரே மலேசியா கொள்கை என்பது 2008 முதல் அரசியலில் அடிபட்ட அம்னோ நடத்தும் ஓர் அரசியல் கபட நாடகம் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் நிறுவனங்களான எம்டெக் என்ற பல்லூடக மேம்பாட்டு வாரியம், பினாஸ் என்ற தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் போன்றவற்றின்  நிதியுதவியுடன் டத்தின் படுக்கா சுகைமி பாபா இந்தத் திரைப்படத்தை எடுத்தார். இது 1969-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் துன் அப்துல் ரசாக் மற்றும் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகியோரின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வரலாற்றுப் படமாகும்.

Arumugam - ambiga with tamil media31969-ஆம் நடந்த மூன்றாவது பொதுத் தேர்தலில் முதன் முறையாக 50.7 சதவிகித மக்களின் வாக்குகளை வென்ற எதிர்க்கட்சிகள் அம்னோவுக்கு ஆட்டத்தைக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்துதான் மே-13 இனக்கலவரம் உருவானது.

இதைப்பற்றி அரசாங்கம் தயாரித்துள்ள வரலாற்றுக்  குறிப்புகளும் நிழல்படங்களும் இந்த மே 13 என்பது சீனர்களின் தூண்டுதல் என்றும் அதில் சீன கம்யூனிஸ்டுகளின்  பங்கும்  உள்ளன என்றும் கூறுகின்றன. அதில் சீனர்களும் மலாய்க்காரர்களூம் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் வீடுகளும் கட்டிடங்களும் தீக்கிரையாக்கப்படுவதும்  காட்டப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மே 13 (1969) மற்றும் புக்கிட் கெப்போங் (1950) நிகழ்வுகள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதுண்டு. புக்கிட் கெப்போங் என்ற படத்தில் சீன கம்யூனிஸ்ட் போராளிகள் மூவார் அருகில் உள்ள புக்கிட் கெப்போங் காவல் நிலையத்தைத்  தாக்கி அங்குள்ள மலாய்க்கார போலிஸ்காரர்களைக் கொல்கின்றனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் சீனர்களை மலாய்க்காரர்களின் எதிரிகளாக காட்டும் தன்மை கொண்டவை. இதைப் பார்க்கும் மலாய்க்காரர்களுக்குத்  தங்களின் சொந்த நாட்டிலேயே மாற்று இனத்தாரால் பலியாக்கப்படுவதைப்  பார்க்கும் போது அவர்கள் மீது வெறுப்பு உண்டாகிறது. இது இனவாதத்தைத்  தூண்டுவதாகும்.

தண்டா புத்ரா படத்தைச் சீனர்கள் பார்த்தால் அவர்களின் ஓட்டுகள் அம்னோ தேசிய முன்னணியின் மலேசிய சீனர் சங்கத்திற்குக்  கிடைக்காது.

எனவே, அம்னோ மிகவும் கவனமாக அந்தப் படத்தை மலாய்க்காரர்களிடையே காட்டி இனவாத அரக்கனுக்குத்  தீனி போடுகிறது.

tp2அதேவேளை, மார்ச் 2001-இல் நடந்த கம்போங் மேடான் வன்முறையில் 6 நபர்கள் கொல்லப்பட்டும் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் மூர்கத்தனமாக தாக்கப்பட்டு கடுமையான வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது மலாய்க்காரர்கள் தமிழர்கள் மீது நடத்திய  மோசமான வன்முறையாகும். இந்த நிகழ்வு பற்றி தமிழில் எழுதப்பட்ட மார்ச்-8 என்ற ஆய்வு நூல் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. இது சார்பாக எந்த விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக, தன்னார்வ குழுக்களின்வழி மேற்கொண்ட நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

பிரதமர் நஜிப் அவர்களின் தலைமையில் அம்னோ மாறியுள்ளது அதனால் அனைத்து சமூகங்களையும் சரிசமமாக ஒருங்கிணைக்க இயலும் என்பதும் ஒரே மலேசியா என்பதும் அரசியல் மாய ஜாலங்கள்.

அம்னோவின் இனவாதம் குறிப்பிட்ட மலாய்க்காரர்களின்  மேலாண்மையின் கீழ் மற்ற இனங்கள்  உரிமையற்ற வகையில் வாழ மட்டுமே வழி வகுக்கும். இந்தியர்களுக்கு அரசியல் மாற்றம் மட்டுமே மாற்று வாழ்வாதாரத்திற்கான   போராட்டங்களுக்கு வழிவகுக்கும். அம்னோவின் வழி இயங்கும் மஇகா-வை தமிழர்கள் புறக்கணிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

TAGS: