பர்வேஸ் முஸாரப் பாகிஸ்தான் திரும்பினார்

musharrafrtnதானாகவே 4 வருடங்கள் நாடு கடந்து வாழ்ந்த முன்னாள் பாகிஸ்தானிய அதிபரான பர்வேஸ் முஸாரப் அவர்கள் நாடு திரும்பியுள்ளார்.

அவரது விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி அவரை வரவேற்றார்கள்.

மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு அவர் தலைமை தாங்க திட்டமிட்டுள்ளார்.

தான் பாகிஸ்தானுக்கு திரும்புவது குறித்து உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், ஆனால், தானும், தனது ஆதரவாளர்களும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கு ஒரு கலவையான உணர்வே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவரைக் கொல்வோம் என்று தலிபான்கள் மிரட்டியுள்ளனர். அவரது கூட்டம் ஒன்று ஏற்கனவே ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

1999 இல் நடந்த இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஜெனரல் முஸாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008 இல் பதவி விலகிய அவர் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.