இசா பெல்டா கூட்டுறவுத் தலைவராக தகுதியில்லையா?

இசா சமட், பெல்டா குடியேற்றவாசிகள் கூட்டுறவு(கேபிஎப்)த் தலைவராக நியமனம் செய்யப்பட்டது ‘சட்டவிரோதமானது’ என்றும், அவருக்கு அதில் உறுப்பியம்பெறும் தகுதிகூட இல்லை என்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் கூறுகிறார்.

அந்தத் தோட்டத்தொழில் நிறுவனத்தின் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டிப் பேசிய சைபுடின், கூட்டுறவின் விதிமுறைகளைக் கருத்தில்கொள்ளாது கேபிஎப் இயக்குனர் வாரியம் இசாவை வாரியத்தில் சேர்த்துகொண்டிருப்பதாகக் கூறினார்.

தன்மூப்பாக செய்யப்பட்டுள்ள இந்நியமனத்தால் அதிருப்தியுற்ற கேபிஎப் நிர்வாகம், இவ்விவகாரம் தொடர்பில் மலேசியக் கூட்டுறவுகள் ஆணைய(எஸ்கேஎம்)த்தின் ஆலோசனையை நாடியிருப்பதாக அவர் சொன்னார்.

“எந்தக் கூட்டுறவு வாரியத்திற்கும் செய்யப்படும் நியமனம் 1993 கூட்டுறவுச் சட்டத்துக்கும் துணை விதிகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும் என்று அது(எஸ்கேஎம்) குறிப்பிட்டுள்ளது.

“அந்தச் சட்டம் மற்றும் துணைவிதிகளின்படி (கூட்டுறவுக்கழகத்தில்) இரண்டாண்டுகள் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே அதன் வாரியத்தில் உறுப்பியம் பெறத் தகுதிபெறுவார்கள் என்பதால் அவரது நியமனமும் இந்த விதிமுறைக்கு உட்பட்டதுதான்”, என்றாரவர்.

பெரியதொரு சதித்திட்டம்?

இதனிடையே பெல்டா குடியேற்றக்காரர்கள்-ஆதரவு என்ஜிஓ-வான அனாக், வேறு பெரிய நோக்கங்களுக்காக இசா கேபிஎப் தலைவராக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறது. பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹோல்டிங் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்)டை அடுத்த ஆண்டில் பங்குச் சந்தையில் இடம்பெற வைக்கும் அரசின் திட்டத்துக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறதாம்.

கேபிஎப், பெல்டா ஹோல்டிங்சில் சென்.பெர்ஹாட்டில் 51 விழுக்காடு பங்குரிமை வைத்துள்ளது.அதன் பெறுமதி ரிம350 மில்லியன் என்று அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் கூறினார்.பெல்டா ஹொல்டிங்சின் பக்கபலத்துடன் எப்ஜிவிஎச் பங்குச் சந்தையில் இடம்பெற முயற்சி செய்கிறது என்றாரவர்.

பங்குச் சந்தையில் இடம்பெறும் முயற்சிக்கு ஆதரவாக எப்ஜிஎச்விக்கு நிதி திரட்டித்தர இசா 367,000 ஹெக்டார் தோட்டநிலத்தை அடகு வைத்திருப்பதாகவும் மஸ்லான் கூறினார்.அதை வைத்து ரிம5பில்லியன் அல்லது ரிம6பில்லியன் மூலதனம் திரட்ட முடியும் என மதிப்பிடப்படுகிறது.

“எதற்காக அவர்கள் கேபிஎப் சொத்துகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்? ஏனென்றால் எப்ஜிவிஎச்-சிடம் பணமில்லை. அதன் வெளிநாட்டு முதலீடுகள் எல்லாமே வீணாகிப் போனது. கெனடாவுக்குச் சென்றார்கள், சீனா சென்றார்கள். எங்கும் பெயர்போட முடியவில்லை.

“இப்போது அதையெல்லாம்விட  பெரிய, 13 நாடுகளுக்குள் ஊடுருவும் ஒரு முதலீட்டுத் திட்டத்தில் பிரதமர் நம்பிக்கை வைத்து இறங்கியிருப்பதுதான் எப்படி என்பது புரியவில்லை…பிரதமராலும் (பெல்டாவுக்குப் பொறுப்பான) துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லானாலும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள இசா குடியேற்றக்காரர்களுக்குத் துரோகம் செய்கிறார் என்றே நம்புகிறேன்.”

எப்ஜிவிஎச்-சைப் பங்குச் சந்தையில் பட்டியலிடும் திட்டத்தை அனாக் எதிர்ப்பதாகத் தெரிவித்த மஸ்லான், அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு மகஜரை அது விரைவில் கொண்டுவரும் என்றார்.

TAGS: