மியான்மர் கலவரத்தில் மேலும் 3 நகரங்கள் நாசம்

myanmarமியான்மரில் மெய்த்திலா நகரில் முஸ்லிம் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில், முஸ்லிம்களின் குடியிருப்புகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் அங்கு 32 பேர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறினர்.

எனவே, அங்கு கலவரம் பரவாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கலவரம் ஓயவில்லை. மாறாக ரங்கூன், நேபைடா, டட்கோன் ஆகிய 3 நகரங்களுக்கும் பரவியது.

டட்கோனில் ஆயுதங்களுடன் வந்த புத்த மதத்தினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனே, அங்கு ராணுவம் வந்து அவர்களை விரட்டியடித்தது. ரங்கூனில் மிகவும் பரபரப்பாக இயங்கும் யுஷானா பிளாகா என்ற மார்கெட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

ரங்கூனின் புறநகர் பகுதியான மிங்காலர் டாங்யுன்ட் நகரிலும் தீ வைப்பு சம்பவம் நடந்தததாக வதந்தி பரவியதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதனால் கடைகள் அடைக்கப்பட்டன.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர். யமெதின் நகருக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த மசூதி மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். அதில் அவை முற்றிலும் அழிந்தன.

இதுபோன்று தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு ரங்கூன், யமெதீன், டட்கோன் ஆகிய 3 நகரங்கள் நாசம் அடைந்துள்ளன.