‘தண்டாபுத்ராவை தனிப்பட்ட ரீதியில் நான் தொடர்ந்து திரையிடுவேன்’

shuhaimiபல விருதுகளைப் பெற்றுள்ள இயக்குநர் ஷுஹாய்மி பாபா, சர்ச்சைக்குரிய தமது மே 13 திரைப்படம் பொது  மக்களுக்குக் காட்டப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

என்றாலும் அந்தத் திரைப்படத்தை காண விரும்புவோருக்கு தனிப்பட்ட முறையில் தாம் தொடர்ந்து திரையிடப்  போவதாக அவர் சொன்னார்.

“தனிப்பட்ட முறையில் அந்தப் படத்தைத் திரையிடுவதற்கு எனக்கு உரிமை உண்டு. மக்கள் அதனை தனிப்பட்ட  முறையில் திரையிட விரும்பி நான் விளக்கம்  சொல்ல வேண்டும் என விரும்பினால் நான் அதனைச்  செய்வேன்,” எனச் ஷுஹாய்மி ஷா அலாமில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழக வளாகங்களில் இரண்டு முறையும் பெல்டா குடியேற்றக் காரர்களுக்கு ஒரு முறையும் அந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த போது அவர் அவ்வாறு கூறினார்.

கேட்டுக் கொள்ளப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு தண்டா புத்ராவை அவர் திரையிடுவாரா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஷுஹாய்மி, அவ்வாறு திரையிடப்படுவதற்குப் பணம் கொடுக்கப்பட்டால் தாம் அதனைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

“நீங்கள் பணம் கொடுத்தால் நான் அதனைத் திரையிடுவேன்,” என பிஎன் ஆதரவாளர் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் ஷுஹாய்மி தெரிவித்தார்.