“பிலிப்பினோக்கள் சபாவை சபா என்று மட்டுமே அழைக்க வேண்டும், அதனுடன் மலேசியா என்ற வார்த்தையை இணைக்கக் கூடாது.”
மலாகானாங் 2008ம் ஆண்டு வெளியிட்ட நினைவுச் சுற்றறிக்கை எண் 162ஐ மேற்கோள் காட்டி பிலிப்பின்ஸ் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்க அமைப்புக்கள் சபா-வை சபா என்றும் மட்டுமே கூற வேண்டும், சபா, மலேசியா எனச் சொல்லக் கூடாது என அந்த சுற்றறிக்கை உத்தரவிடுவதாக வெளியுறவுத் துறை அலுவலகத்தைச் சேர்ந்த துணைச் செயலாளரான ரோய் எக்ரேலா தெரிவித்தார்.
சபா பூசல் காரணமாக இடம் பெயர்ந்துள்ள பிலிப்பினோ மக்களுக்கு மனித நேய உதவிகளை வழங்குவது தொடர்பில் விவாதம் நடத்த தேசியப் பேரிடர் அபாய நிர்வாக மன்றத்தை பல அமைப்புக்கள் சந்தித்த போது எக்ரேலா அந்த அறிக்கையை விடுத்தார்.
அந்தக் கூட்டத்தின் போது ‘சபா, மலேசியாவிலிருந்து’ வெளியேறியவர்கள் என இடம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிட்ட சமூக நலன், மேம்பாட்டுத் துறைப் பேராளர் குறிப்பிட்டார்.
எக்ரேலா-வின் அறிவிப்பைத் தொடர்ந்து சபா மீதான அரசாங்கக் கொள்கை மாறி விட்டதா என பிலிப்பின்ஸ் கடற்காவல் துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பினார். சபா மீது பிலிப்பின்ஸ் இன்னும் கோரிக்கை வைத்துள்ளது.
“நாம் கோத்தா கினாபாலு, சபா என்று மட்டும் அழைப்போம்.. மலேசியாவை விட்டு விடுவோம்,” என எக்ரேலா பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
சபா மீதான கோரிக்கையை பிலிப்பின்ஸ் இன்னும் தொடர முடியும் என 2011ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைச் சுட்டிக் காட்டிய அவர், அந்த தீர்ப்பு தனியானது என்றும் நினைவுச் சுற்றறிக்கை எண் 162ம் குடியரசுச் சட்டம் 5446 அல்லது Baselines சட்டமும் வேறானவை என்றும் தெரிவித்தார்.
அதே கூட்டத்தில் சபாவிலிருந்து திரும்பும் மக்களை மாற்றப்பட்டவர்கள் என்றும் திரும்புகின்றவர்கள் என்றும் அழைப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ‘இடம் பெயர்ந்த மனிதர்கள்’ என அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
சபாவிலிருந்து மார்ச் 23ம் தேதி வரையில் 3,693 பிலிப்பினோக்கள் வந்துள்ளதாக வட்டாரப் பேரிடர் அபாய நிர்வாக மன்ற இயக்குநர் ரேமன் சாந்தோஸ் கூறினார்.
திங்கட்கிழமையன்று சபாவிலிருந்து மேலும் 186 பேர் வந்தனர். அவர்களுக்கு உள்ளூர் அரசாங்க அமைப்புக்கள் உதவி அளித்தன.
-இண்டர் அக்சன்.காம்