டாக்ஸி அனுமதிகளை தனி நபர்களுக்கு வழங்கிய பிரதமருக்கு ஆதரவாக அமைச்சரான நோ ஒமார் பேசியுள்ளார்.
அது அரசியல் மாயாஜாலம் அல்ல என்றும் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை அது ‘காப்பி அடிக்கவில்லை’ என்றும் அவர் சொன்னார்.
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ‘காலம் தாழ்த்தியது’ என விவசாய, விவசாயத் தொழில் அமைச்சருமான நோ தெரிவித்தார்.
தாம் தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக இருந்த போது டாக்ஸி ஒட்டுநர்களுக்கு 3,000 தனி நபர் டாக்ஸி அனுமதிகளை வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
“அதற்காக தமக்கு நன்றி சொல்ல இன்று கூட டாக்ஸி ஒட்டுநர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.”
“பிரதமரது நடவடிக்கை பிஎன் -னின் அரசியல் மாயாஜாலம் என ராபிஸி விடுத்துள்ள அறிக்கை மக்களை ஏமாற்றுவதாகும்,” என்றார் நோ.
தமது மோசமான அறிவாற்றலை காட்டும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் ராபிஸி ஆய்வு செய்ய வேண்டும் என அவர் அறிவுரை கூறினார்.
பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை ‘காப்பி அடிக்கும் அளவுக்கு’ பிஎன் விரக்தி அடைந்துள்ளது என்றும் அந்தக் கொள்கைகளைப் பயன்படுத்தி வரும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு டாக்சி ஒட்டுநர்களை வாக்களிக்கச் செய்ய முயலுகின்றது என்றும் நேற்று ராபிஸி குற்றம் சாட்டியிருந்தார்.
பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ள பொருளாதாரத் திட்டங்கள் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றன என்பதை பிஎன் ‘வெளிப்படையாக ஒப்புக் கொள்வதை’ நஜிப் ஆயிரம் பேருக்கு தனி நபர் டாக்ஸி அனுமதிகளை வழங்கியுள்ள நடவடிக்கை காட்டுகிறது என்றும் ராபிஸி சொன்னார்.
தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு டாக்ஸி அனுமதிகள் வழங்கப்பட்டு அவை பின்னர் ஒட்டுநர்களுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்படும் நடப்பு முறை ரத்துச் செய்யப்படும் என பக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
அதற்குப் பதில் ‘டாக்ஸி தொழில் முனைவர்களை’ அதிகமாக உருவாகும் பொருட்டு அனுமதிகள் நேரடியாக
டாக்ஸி ஒட்டுநர்களுக்கு வழங்கப்படும்.