‘பினாங்கை மீண்டும் கைப்பற்ற பிஎன்-னுக்கு உயர்ந்த தார்மீக வலிமையும் ஒற்றுமையும் தேவை’

penangவரும் பொதுத் தேர்தலில் பினாங்கைக் கைப்பற்றுவது மிகவும் கடுமையான பணியாக இருக்கும் என்பதை  பினாங்கு பிஎன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

காரணம் பிஎன் கூட்டணி மீது அந்த மாநிலத்தில் நிலவும் உணர்வுகளை அது புரிந்து கொண்டுள்ளதாகும்.

“அந்தப் பணி கடுமையானது. மக்கள் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். என்றாலும் எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்,” என பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயூ கினி டிவிக்கு வியாழக் கிழமை அளித்த பேட்டியில் கூறினார்.

“தேர்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தார்மீக வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இப்போது பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் தார்மீக ஆற்றல் வலுவடைந்துள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.

“2008ம் ஆண்டு மோசமான தோல்வியை நாங்கள் சந்தித்திருப்பதால் தார்மீக வலிமையை உயர்த்துவது தான் ஒரு தலைவர் செய்ய வேண்டிய முக்கியக் கடமையாகும்.”

தெங் கடந்த ஆண்டு பிஎன் தலைவராக நியமிக்கப்பட்டார். வரும் தேர்தலில் பினாங்கை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கான அவரது வழி முறைகள் பற்றியும் பினாங்கில் வீசும் பக்காத்தான் ராக்யாட் ஆதரவு அலையை பிஎன் மாற்ற முடியுமா என்றும் தெங்-கிடம் வினவப்பட்டது.

“இப்போது தார்மீக வலிமை மேலோங்கியுள்ளது. பிஎன் டி சட்டைகளை அணிவது குறித்து தாங்கள் இப்போது அச்சம் அடையவில்லை என உறுப்புக் கட்சிகள் கூறுகின்றன.”

“அவற்றுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் சிறப்பாக இயங்க முடியும் என மக்களுக்குச் சொல்வதற்கு முன்னர் அந்த நம்பிக்கை ஏற்படுவது அவசியமாகும்,” என்றார் தெங்.

“என்றாலும் அவர் பிஎன் வியூகங்கள் பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அவை அமலாக்கப்பட்ட பின்னரே அவை தெளிவாகும் என்றார் அவர்.

‘அரசியல் சுனாமி’ என அழைக்கப்பட்ட 2008 தேர்தலில் பினாங்கில் பிஎன் 11 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. அந்த 11 இடங்களிலும் அம்னோ வெற்றி பெற்றது. கெரக்கான், மசீச ஆகியவை எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. அவற்றில் 19 இடங்களை டிஏபி-யும் 9 இடங்களை பிகேஆர் கட்சியும், பாஸ் கட்சி ஒர் இடத்தையும் இப்போது வைத்துள்ளன.

TAGS: