எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்துவீர்: போலீசுக்கு சிவராசா கோரிக்கை

1sivaபோலீசார்  “எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை” நிறுத்த வேண்டும் என்று சுபாங் எம்பி ஆர்.சிவராசா  இன்று வலியுறுத்தினார்.  ஜனவரியில், போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தம்மீதும் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ மீதும் சுபாங் ஒசிபிடி யாஹ்யா ரம்லி போலீஸ் புகார் செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் தொடர்பில் இன்று அரை மணி நேரத்துக்கு போலீசார் தம்மை விசாரித்ததாக சிவராசா கூறினார்.  குற்றவியல் சட்டம் பகுதி 500-இன்கீழ் அவதூறு கூறியதாக தங்கள்மீது குற்றம் சுமத்தி ஒசிபிடி புகார் செய்துள்ளதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்றாரவர்.

1siva1“கடந்த வாரம் கோபிந்திடமும் (இடம்) விசாரணை செய்யப்பட்டதாக அறிந்தேன்”, என்று சிவரசா கூறினார்.

மாற்றரசுக்கட்சி எம்பிகளுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுப்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் நேரம் விரயமாகிறது என்றவர் வருத்தப்பட்டார்

சிவராசா தாமும் கோபிந்தும் போலீஸ் காவலில் இறந்துபோன சாங் சின் டே-க்கு இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய  வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தாருக்கு உதவியதாக தெரிவித்தார். முதல் சவப் பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தார் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இரண்டாவது சவப் பரிசோதனை தேவையற்றது என மருத்துவ அதிகாரிகள் சொன்னதை நம்பி சாங் குடும்பத்தினர் அம்முயற்சியைக் கைவிட்டனர்.

சாங், சிவராசாவின் தொகுதியில் உள்ள  சுபாங் புதுக்கிராமத்தின் தலைவரான சாங் சான் மாவின் புதல்வராவார்.

“இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் போலீஸ் தலைமையகத்துக் கொண்டுசெல்ல அந்தக் குடும்பத்தாருக்கு உதவினேன்”, என்றார் சிவராசா.

யாஹ்யாவும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசானும் அக்குடும்பதாரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் புக்கிட் அமான் சென்றதாக அவர் கூறினார்.

மங்கோலிய பெண் அல்டான்துயா கொலை பற்றி மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று தாமும் கோபிந்தும் கேட்டுக்கொண்டிருப்பதால் இது தங்களை அடக்கிவைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம் என்று சிவராசா சொன்னார்.

“அப்படியும் இருக்கலாம்தான்”, என்றாரவர்.

1siva2அல்டான்துயா கொலை தொடர்பில் தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணம் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக் உத்தரவின்பேரில் செய்யப்பட்டது  என்று கூறப்பட்டிருப்பதை அடுத்து அவர்கள் அவ்வாறு ஒரு கோரிக்கையை எழுப்பினர்.

பாலாவின் வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து அத்தகவலை வெளியிட்டார். இரண்டாவது சத்திய பிரமாணத்தை வரைந்த சிசில் எப்ராஹமே தம்மிடம் இதைத் தெரிவித்ததாகவும் அமெரிக் கூறினார்.

2006-இல் பாலா தம் முதலாவது சத்திய பிரமாணத்தில் அல்டான்துயா கொலையில் நஜிப்புக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கும் தொடர்புண்டு என்று கூறியிருந்தார். ஆனால், மறுநாளே இன்னொரு சத்திய பிரமாணத்தில் அதை மறுத்தார்.

TAGS: