பக்காத்தான் ஏழு மாநிலங்களில் வெற்றி காணும் என லிம் கிட் சியாங் ஆரூடம்

LKS13வது பொதுத் தேர்தலில் பெர்லிஸையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றக் கூடிய நிலையை பக்காத்தான்  ராக்யாட் எட்டியுள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆரூடம் கூறியிருக்கிறார்.

அதனால் 2008ல் ஐந்து மாநிலங்களைப் பிடித்த பக்காத்தான் 2013ல் ஏழு மாநிலங்களைக் கைப்பற்றும் என
அவர் சொன்னார்.

சிலாங்கூர், பினாங்கு, கெடா, கிளந்தான் ஆகியவற்றில் பக்காத்தான் அதிகாரத்தைத் தக்க வைத்துக்  கொள்வதோடு பேராக்கையும் மீண்டும் கைப்பற்ற முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

பெர்லிஸ், நெகிரி செம்பிலான் வெற்றிகள் வழி புத்ராஜெயாவை எடுத்துக் கொள்ளும் பக்காத்தான் நம்பிக்கை
சாத்தியமாகி விடும் என்றும் லிம் கருதுகிறார்.

அவர் சின் சியூ நாளேட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அந்த ஆரூடங்களை வழங்கியுள்ளார்.LKs1

என்றாலும் பாஸ் தலைமையிலான கெடா அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளதை லிம் ஒப்புக் கொண்டார்.

2008 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ‘அரசியல் சுனாமி’ இன்னும் உச்சக் கட்டத்தை அடையவில்லை என்றும்  அவர் சொன்னார்.

“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கில் தொடங்கிய அரசாங்க எதிர்ப்பு அலை நெகிரி செம்பிலானுடன் நின்று  விட்டது. அரசியல் சுனாமி அங்கு கட்டுப்படுத்தப்பட்டது. அது இன்னும் உச்சக்கட்டத்தை எட்டவில்லை.”

“சுனாமி உச்சக் கட்டத்தை அடையும் போது தான் அதன் வேகம் தணியும். வரும் தேர்தலில் ஏற்படும் பெரிய
அரசியல் சுனாமி நாடு முழுவதையும் தாக்கும் என நான் நம்புகிறேன்.”

பெர்லிஸில் அதிகார மாற்றம் வேண்டும் என்ற உணர்வு உறுதியாக இருப்பதை பக்காத்தான் உணர்ந்துள்ளது என  லிம் சொன்னார்.

2008ல் நெகிரி செம்பிலானில் பக்காத்தான் 15 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. மாநில அரசாங்கத்தை
அமைப்பதற்கு அது நான்கு இடங்கள் குறைவாகும்.

ஜோகூர் பற்றிக் குறிப்பிட்ட லிம், அங்குள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கில்
பக்காத்தான் வெற்றி பெற்றால் அங்கு அம்னோவும் மசீச-வும் நிலைகுலைந்து விடும் எனச் சொன்னார்.

LKS2

 

ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தாம் முடிவு செய்துள்ளது பற்றிக்  குறிப்பிட்ட லிம் அம்னோ சிலாங்கூரில் கவனம் செலுத்துவதைப் போன்று அம்னோ கொல்லைப்புறத்தில்  நெருப்பு வைப்பதற்கு அது ஒப்பாகும் என்றார்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் பெர்மாத்தாங் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பேராக்கிற்கு  மாறக் கூடிய சாத்தியத்தையும் லிம் நிராகரிக்கவில்லை.