ஆவி வாக்காளர்கள், தேர்தல் மோசடி பற்றிய அச்சம், குடிநுழைவுக்காரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியாகி மாறி இனவாதத் தாக்குதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக பெர்சே எச்சரித்துள்ளது.
அரசியல் செராமாக்களிலும் இணைய வீடியோக்களிலும் துண்டுப் பிரசுரங்களிலும் குடியேற்றக்காரர்களை இழிவு படுத்தும் பிரச்சாரம் நிகழ்வதாக புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அந்த இயக்கம் கூறியது.
“பெர்சே பெயரின் கீழ் கட்சிச் சார்புடைய, காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் அறிக்கைகள் இணைய
பல்லூடகங்களிலும் முகநூல் பக்கங்களிலும் சேர்க்கப்படுவது குறித்து நாங்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளோம்,” என பெர்சே தெரிவித்தது.
“நாங்கள் அத்தகைய இனவாதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் ஆதரிக்கவில்லை எனத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்,” என பெர்சே செயலகம் வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பு கூறியது.
அத்தகைய இணைய வீடியோக்களில் ஒன்றில் உள்நாட்டவர் ஒருவர் விழிக்கும் போது தமது வீட்டில் அந்நியர்கள் நிறைந்துள்ளதைக் காண்கிறார். அந்த அந்நியர்கள் அவரது வீட்டு முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை NasiKandar1957 என்னும் புனை பெயரைக் கொண்டவர் இணையத்தில் சேர்த்துள்ளார். அந்த வீடியோவை பெர்சே சின்னத்துடன் முடிவடைகிறது.
‘காழ்ப்புணர்ச்சி அடிமையாக வேண்டாம்’
பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என அந்நியர்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரம் பாஹாசா இந்தோனிசியா, வங்காள, பர்மிய, அரபு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது இன்னொரு உதாரணமாகும்.
அந்த துண்டுப் பிரசுரம் ‘Asalkan Bukan Umno’ (ABU) சின்னத்தைக் கொண்டுள்ளது.
தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது மீது குறிப்பாக சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் பல முன்னாள் அரசாங்க அதிகாரிகள் அளித்த சாட்சியங்களைத் தொடர்ந்து பல மலேசியர்கள் ஆத்திரமடைந்துள்ளதைத் தான் அறிந்துள்ளதாக பெர்சே குறிப்பு மேலும் தெரிவித்தது.
“விதி விலக்குப் பெற்றுள்ளதைப் போல மோசடிச் சம்பவங்கள் தொடருவது மேலும் வருத்தத்தை அளிக்கிறது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிகளும் குறைவாகவே உள்ளன.”
என்றலும் அதிருப்தி அடைந்துள்ள மலேசியர்கள் காழ்ப்புணர்வுக்கும் வெறுப்புணர்வுக்கும் அடிமையாகி குற்றச் செயல்களில் சம்பந்தப்படக் கூடாது என பெர்சே அறிவுரை கூறியது.