கோ : தண்டா புத்ராவைத் தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தப்பில்லை

1koh1969 மே 13 இனக் கலவரத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட தண்டாபுத்ராவைத் தனிப்பட்ட முறையில் திரையிடலாம். தப்பில்லை. ஏனென்றால், அமைச்சரவை முன்பு அதைப் பொதுவில் திரையிடுவதற்கு அனுமதி வழங்குவதைத்தான் தள்ளிவைத்திருந்தது.

“தனிப்பட்ட முறையில் சில இடங்களில் அது திரையிடப்பட்டிருக்கிறது. அதைப் பொதுவில் திரையிடாதவரை சரிதான். பொதுவில் திரையிடக்கூடாது என்பதுதான் அமைச்சரவையின் முடிவு”, என பிரதமர்துறை அமைச்சர் கோ கூ சூன் இன்று கூறினார்.

அத்திரைப்படம் இனஉறவைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்று கூறப்பட்டுள்ள நிலையிலும் எப்படித் திரையிட அனுமதிக்கப்பட்டது என்று வினவியதற்கு அப்படிக் கூறுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

“எத்தனை தடவை அது திரையிடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அதனால் இனச் சச்சரவு  ஏற்பட்டதுண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை. அதைப் பற்றி புகார் சொல்லுமுன்னர் உண்மை தெரிந்து பேசுங்கள்”, என்று கோ செய்தியாளர்களிடம் கூறினார்.

தண்டாபுத்ராவில் ‘பொருத்தமற்ற சில காட்சிகள்’ இருப்பதால் அதைத் திரையிடுவதற்கு அனுமதி கொடுப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் இதற்குமுன் அறிவித்திருந்தார்.