இண்ட்ராப் பிரதமரைச் சந்தித்ததை எண்ணி பிகேஆர் கலங்கவில்லை

1hindrfஎதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு இண்ட்ராப் ஆதரவு இல்லை என்றாலும்கூட அதற்கு இந்தியர் ஆதரவு குறைந்துவிடாது என பிகேஆர் நம்புகிறது.

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அச்சமூகத்துக்காக பக்காத்தான் குறிப்பாக பிகேஆர்  “என்ன செய்துள்ளது என்பதை” இந்திய வாக்காளர்கள் அறிவார்கள் என்று கூறினார்.

1video1“நாங்கள் என்ன செய்தோம் என்பதை இந்திய சமூகம் அறியும். நாடற்ற மக்களுக்கு, போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பங்களுக்கு, இந்தியர் சம்பந்தப்பட்ட வழக்குகளில்  பிகேஆர் உதவி அளித்து வந்துள்ளது”, என்று பிகேஆரில் இந்தியர் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குத் தீர்வுகாண முன்னின்று பாடுபடுபவரான சுரேந்திரன் கூறினார்.

“அதனால் ஒன்றும் (இந்தியர் ஆதரவு குறையப்போவது) இல்லை.  இண்ட்ராப் எங்களுடன் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை”, என்ற சுரேந்திரன் இண்ட்ராப் செயல்திட்டத்தைத் தம் கட்சி “கொள்கை அளவில்” ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் வலியுறுத்தினார்.

அப்படியானால், மீண்டும் இண்ட்ராபுடன் பேச்சுக்களைக் கட்சி வரவேற்குமா என்று வினவியதற்கு எச்சரிக்கையுடன் பதில் அளித்தார் சுரேந்திரன்.

“இந்தியர்களின் நலவளர்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபடும் எண்ணம்கொண்ட எத்தரப்பினருடனும் நாங்கள் ஒத்துழைக்கத் தயார்”, என்றாரவர்.

 ‘பேச்சுக்களை வேறு மாதிரியாக நடத்தி இருக்கலாம்’

இதனிடையே, டிஏபி கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, பக்காத்தானுடன் பேச்சு நடத்துவதில் இண்ட்ராபின் அணுகுமுறை குறித்தும் மாற்றரசுக் கட்சி குறித்து இண்ட்ராப் தலைவர்கள் விடுத்த அறிக்கைகள் குறித்தும் வருத்தம் கொண்டிருக்கிறார்.

“இன்னும் நல்ல முறையில் அதைச் செய்திருக்கலாம்”,  என்று சார்ல்ஸ் கூறினார்.

என்றாலும், இண்ட்ராப் “திரும்பி வரும்” என்று ஆருடம் கூறிய அவர், அந்த என்ஜிஓ பக்காத்தான் பக்கம் வரத்தான் வேண்டும், அதற்கு “வேறு வழி இல்லை”, என்றார்.

அதே வேளை இண்ட்ராப், பக்காத்தானுக்கு அதன் ஆதரவைத் தெரிவிக்கவில்லை என்றால், “இந்தியர் வாக்குகளில் ஒரு சிறு பகுதி பாதிக்கப்படலாம்.

“இண்ட்ராப் ஆதரவாளர்கள் பக்காத்தானுக்கு வாக்களிப்பதையே விரும்புகிறார்கள். ஆனால், பக்காத்தான் தலைவர்கள் சொந்தத் திட்டம் வைத்திருப்பதுபோல் தெரிகிறது”, என்று கூறியவர் 2008-க்குப் பிறகு இந்தியர் முன்னேற்றத்துக்காக பக்காத்தான் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது “மிகைப்படுத்தல்” ஆகும் என்றார்.

திங்கள்கிழமை இண்ட்ராப் , புத்ராஜெயாவில் நஜிப்புடன் ஒரு மணி நேரச் சந்திப்பை நடத்தியது.  அச்சந்திப்புக்குப் பின்னர் பிரதமருடன் மேலும் பேச்சுக்கள் நடைபெறும் என அது கூறியது.

 

TAGS: