பெர்சே விசாரணை: “போலீஸ், மாது ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது”

பெர்சே 2.0 பேரணி தொடர்பான பொது விசாரணை தொடங்கியுள்ளது. ஜாலான் துன் சம்பந்தனில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் போலீசார் மாது ஒருவரை முரட்டுத்தனமாக தரையில் தள்ளியதை தாம் பார்த்ததாக சாட்சி ஒருவர் கூறியிருக்கிறார்.

கென்னத் சான் வென் சின் என அடையாளம் கூறப்பட்ட அவர், விசாரணையை நடத்தும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

தாம் ஜுலை 9ம் தேதி பிற்பகல் 3 மணி வாக்கில் கிளானா ஜெயாவிலிருந்து எல் ஆர் டி-யில் சென்றதாக அவர் சொன்னார்.

“நாங்கள் பாசார் செனி நிலையத்தில் இறங்க விரும்பினோம். ஆனால் அது மூடப்பட்டிருந்தது. ஊடகம் ஒன்றில் வேலை செய்யும் என் தோழி என்னுடன் இருந்தார். நாங்கள் ஜாலான் புடு வழியாக மே பாங்க் கட்டிடத்தை நோக்கி நடந்தோம்.”

“பேரணி ஒன்றில் கலந்து கொண்ட முதல் அனுபவம் எனக்கு அதுவாகும். நான் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தேன். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுவதாக பலர் எங்களை எச்சரித்தனர்.

“அடுத்து நாங்கள் ஜாலான் துன் சம்பந்தனை நோக்கி செல்லத் தொடங்கினோம். “தங்காப், தங்காப்” (கைது, கைது) என போலீஸ் அதிகாரிகள் உரத்த குரலில் சொல்வது எங்களுக்குக் கேட்டது.

மலாய் மாது ஒருவரை அவர்கள் முரட்டுத்தனமாக கைது செய்து அவரது தலையை சாலையில் தள்ளுவதை நாங்கள் பார்த்தோம்.”

அந்த சம்பவத்தை என் தோழியும் படம் எடுத்தார். போலீசார் அவரிடமும் முரட்டுத்தனமாக நடந்து  கொண்டனர். கேமிராவை அவரது முகத்தின் மீது தள்ளினர் என்றும் கென்னத் சொன்னார்.

ஜாலான் புடுவில் சிறுவன் ஒருவனை போலீஸ் அதிகாரிகள் உதைப்பதையும் தாம் பார்த்ததாகவும் அதனை படம் பிடித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“படங்கள் எடுக்க வேண்டாம் என அவர்கள் எங்களை எச்சரித்தனர். எங்கள் கேமிராவை உடைக்கப் போவதாகக் கூட அவர்கள் மருட்டினர். போலீஸ் குறித்து அந்தச் சிறுவன் ஏதோ சொன்னதும் போலீஸ்காரர்கள் அவன் பக்கம் திரும்பி விட்டார்கள்.”

பெர்சே 2.0 பேரணி குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கென்னத் முதலாவது சாட்சி ஆவார்.

அந்த விசாரணையின் நோக்கங்கள்:

ஜுலை 9ம் தேதியிலும் அதற்கு முன்னர் நிகழ்ந்த மனித உரிமை அத்துமீறல் சம்பவங்களை அடையாளம் காண்பது

அந்த அத்துமீறல் எப்படி நிகழ்ந்தது அதன் நடமுறையையும் சம்பந்தப்பட்ட அமைப்பையும் அடையாளம் காண்பது

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க பரிந்துரைகளை வழங்குவது

அந்த விசாரணைக்கு மனித உரிமை ஆணையத்தின் உதவித் தலைவர் காவ் லேக் தீ தலைமை தாங்குகிறார். மாஹ்முட் ஸுஹ்டி அப்துல் மஜிட், டெட்டா சாமென் ஆகிய மற்ற ஆணையர்கள் அவருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

ரோஜர் சான், ரிச்சர்ட் வீ ஆகியோர் வழக்குரைஞர் மன்றத்தையும் ஏஎஸ்பி என் ராஜகோபால், ஏஎஸ்பி லிம் சீ வா ஆகியோர் போலீஸ் படையையும் பிரதிநிதித்து அந்த விசாரணையில் கலந்து கொண்டுள்ளனர்.

தாம் அந்தப் பேரணியில் பங்கு கொள்ளச் செல்லவில்லை என்றும் ஆர்வம் காரணமாக அங்கு சென்றதாகவும் கென்னத் தெரிவித்தார்.

“அந்தச் சம்பவத்துக்கு முன்பு நான் வாக்காளராகப் பதிந்து கொள்ளவில்லை. ஆனால் இப்போது பதிவு செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.”

ஆதாரமாக சமர்பிக்கப்பட்டுள்ள படங்கள் சாதாரணமானவை அல்ல எனக் குறிப்பிட்ட கென்னத், அது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நிகழ்வதில்லை என மாஹ்முட் ஸுஹ்டி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது சொன்னார்.

துங் ஷின் மருத்துவமனைக்குள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதை தாம் பார்க்கவில்லை என்றும் ஆனால் அந்த வளாகத்துக்குள் நீர் பாயச்சப்பட்டதைக் கண்டதாகவும் வீ தொடுத்த கேள்விக்கு பதில் அளித்த போது கென்னத் குறிப்பிட்டார்.

TAGS: