ஜோகூர் மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதைத் தொடர்ந்து டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், அந்தத் தென் மாநிலத்தில் பிஎன் வைத்துள்ள இரும்புப் பிடியைத் தகர்க்கும் பக்காத்தான் ராக்யாட் முயற்சிக்கு மேலும் ஊக்கமுட்டும் பொருட்டு ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வரும் பொதுத் தேர்தலில் லிம் களமிறங்கும் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் வேலை செய்யும் லிம் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் அதனைத் தெரிவித்தன.
பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஜோகூர் ஜெயாவாகும். அங்கு
பிரச்சார எந்திரத்தை அமைக்குமாறு குழுவுக்கு லிம் உத்தரவிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.
“இது வரை எங்கள் குழு கேலாங் பாத்தாவில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. உள்ளூர் தலைவர்களையும் வாக்காளர்களையும் நாங்கள் பல இடங்களில் சந்தித்து வருகிறோம்.”
“ஆனால் நேற்றிரவு திடீரென ஜோகூர் ஜெயாவிலும் அதனைச் செய்யுமாறு லிம் எங்களைக் கேட்டுக்
கொண்டார்,” எனக் கட்சித் தலைவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார். வியாழக் கிழமை இரவு அந்தப்
பிரச்சாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
கடந்த இரு வாரங்களாக தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதால்
தென் ஜோகூரில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த லிம் எண்ணியிருக்க வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் கருதுகின்றன.
“ஜோகூர் ஜெயாவில் போட்டியிட லிம் முடிவு செய்தால் அது ஜோகூரில் 15 நாடாளுமன்றத் தொகுதிகளை
மட்டுமின்றி மாநில அரசாங்கத்தையும் பக்காத்தான் கைப்பற்றுவதற்கான வேகத்தை வழங்கும்.”
“நாங்கள் 25 முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவை விரைவில்
அறிவிக்கப்படும்,” அடையாளம் கூற விரும்பாத அந்த டிஏபி தலைவர் சொன்னார்.
என்றாலும் ஜோகூர் ஜெயாவில் லிம் போட்டியிடும் சாத்தியமில்லை என ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ
செங் ஹாவ் மலேசியாகினியிடம் கூறியிருக்கிறார்.
“ஒருவருக்கு ஒர் இடம்” என்ற கொள்கையை டிஏபி வைத்துள்ளது. அந்தக் கொள்கையை லிம் ஆதரிப்பார் என
நான் நம்புகிறேன். 2008க்கு பின்னர் டிஏபி திறமையான பலரைக் கவர்ந்துள்ளது. எங்களிடம் போதுமான
வேட்பாளர்கள் உள்ளனர்,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.
உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் வசமுள்ள பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இரண்டு
சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஜோகூர் ஜெயாவாகும். அடுத்த ஜோகூர் மந்திரி புசாராகும் வாய்ப்பை காலித் நோர்டின் பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது. பெர்மாஸ் இன்னொரு சட்டமன்றத் தொகுதியாகும்.
பக்காத்தான் குறி வைத்துள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாசிர் கூடாங்கும் ஒன்றாகும். ஜோகூர் ஜெயா
மலாய்க்காரர் அல்லாதாரை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதியாகும். மொத்த வாக்களார்களில் 50
விழுக்காட்டினர் சீனர்கள், ஏழு விழுக்காடு இந்தியர்கள்.
கடந்த இரு தேர்தல்களிலும் மசீச-வைச் சேர்ந்த தான் செர் பூக் வெற்றி பெற்றுள்ளார்.