வேதமூர்த்தி உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்

Hindraf-Waytha faintsமார்ச் 10 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி இன்று இரவு மணி 8.45 க்கு அவரது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியும் இன்னொரு சிறுமி வேதஸ்ரியும் கொடுத்த சோயாபீன் நீரை பருகி அவர் கடந்த 22 நாள்களாக மேற்கொண்டிருந்த அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

வேதமூர்த்தி இன்று மாலை 4 மணி அளவில் குளியலறைக்குச் செல்ல முயன்ற போது மயங்கி விழுந்தார்” என  ஹிண்ட்ராப் துணைத் தலைவர் டபிள்யூ ஜம்புலிங்கம் கூறினார்.

கண்காணிக்கப்படுவதற்காக ஜாலான் ஈப்போவில் உள்ள டமாய் மருத்துவமனையில் வேதமூர்த்தி
சேர்க்கப்பட்டுள்ளதாக ஜம்புலிங்கம் மேலும் தெரிவித்தார்.

“அவருடைய சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விட்டதாலும் இரத்த அழுத்தம் மிகவும் உயர்வாக
இருப்பதாலும் அவர் இப்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.”

மருத்துவ சிகிட்சைக்குப் பின்னர் வேதமூர்த்தி மீண்டும் ராவாங்கிற்கு திரும்பி வந்து கோயிலில் ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுடன் இருக்க விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கோயிலுக்கு திரும்புகிறார் என்று இரவு மணி 7.25 க்கு அறிவிக்கப்பட்டது.

இரவு மணி 8.15 க்கு அவர் மருத்துவமனை அம்புலன்ஸில் கோயில் வளாகம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு குழுமியிருந்த 400 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

வேதமூர்த்தியின் நான்கு கோரிக்கைகள்

களைப்புடன் காணப்பட்ட வேதமூர்த்தி ஆதரவாளர்கள் புடைசூழ அவரது இருக்கையில் அமர்ந்த பின்னர், அவர் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் விடுத்துள்ள வேண்டுகோள்கள் பற்றி குறிப்பிட்ட ஜம்புலிங்கம், உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றால் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வேதமூர்த்தியின் நான்கு வேண்டுகோள்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக ஜம்புலிங்கம் தெரிவித்தார்.

அவரின் கோரிக்கைகள்:

1.  இந்தியர்களின் தன்மானத்தைக் காப்பதற்கான ஹிண்ட்ராப்பின் போராட்டம் தொடர வேண்டும்.

2. ஹிண்ட்ராப்பின் பெருந்திட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட ஒப்புக்கொள்ளும் தரப்பினருக்கு மட்டுமே ஹிண்ட்ராப் ஆதரவு அளிக்கும்.

3. பெருந்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்து போடாத வரையில் பாரிசான் மற்றும் பக்கத்தான் ஆகிய இரு கூட்டணியினரும் நடத்தும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிக்க வேண்டும்.

4. பெருந்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து எஸ்எம்எஸ் வழியாக ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுக்கப்படும். ஹிண்ட்ராப் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாளர்கள் கட்டுப்பட வேண்டும்.

ஹிண்ட்ராப் துணைத் தலைவர் ஜெம்புலிங்கம் இக்கோரிக்கை ஒவ்வொன்றையும் அறிவித்து இதனை ஒப்புக்கொள்கிறீர்களா என்று அங்கிருந்த ஹிண்ட்ராப் ஆதரவாளர்களைக் கேட்டார்.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் “ஒப்புக்கொள்கிறோம்”, ஒப்புதல் அளிக்கிறோம்” என்று கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியின் நான்கு வேண்டுகோள்களுக்கும் கோயிலில் குழுமியிருந்த ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் ஒப்புதல் அளித்தைத் தொடர்ந்து, தமது உண்ணாவிரதத்தை முடித்துகொள்ள வேதமூர்த்தி ஒப்புதல் அளித்தார்.

 

 

 

TAGS: