‘சுலு சுல்தானுடன்’ தொடர்புடைய மனிதர் போலீசாரிடம் சரணடைந்தார்

ridwan1‘சுலு சுல்தான்’ குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட ஒருவர் போலீசாரிடம்  சரணடைந்துள்ளார்.

அவர் பினாங்கில் இஸ்லாமிய நலன் சங்கம் ஒன்றுக்குத் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார்.

முகமட் ரிட்வான் சுலைமான் என அடையாளம் கூறப்பட்ட அந்த மனிதர் சரணடைந்த பின்னர் பாதுகாப்புக்   குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

ridwanசுலு சுல்தான் வாரிசு எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் பலரில் ஒருவரான முவாட்சுல் லைல் தான் கிராம்-க்கு தாம் நிதி உதவி செய்ததை முகமட் ரிட்வான் சரணடைவதற்கு முன்னர் ஒப்புக் கொண்டார்.

என்றாலும் சபா மாநிலம் மீதான தமது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான  பேரை அங்கு அனுப்பியதாகக் கூறிக் கொண்ட மூன்றாவது ஜமாலுல் கிராம்-உடன் தமக்கு எந்தத் தொடர்பும்  இல்லை என அவர் சொன்னார்.

“எனக்கு ஜமாலுல் கிராம்-மைத் தெரியாது,” என முகமட் ரிவான் சொன்னதாக பெர்னாமா தெரிவித்தது.

முகமட் ரிட்வான் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாகச் சரணடைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அறிக்கையை சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் நேற்று வெளியிட்டார்.

ஜமாலுல் கிராம்-க்கு விசுவாசமான ஆட்கள் சபாவுக்குள் ஊடுருவியதற்கும் முகமட் ரிவானுக்கு சம்பந்தமில்லை என விளக்கிய ஹம்சா, அவர் போலீஸ் விசாரணைக்கு உதவ முடியும் என்றார்.