டிஏபி, நஜிப்பின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரை ரவூப்பில் நிறுத்துகிறது

dapஅம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் உள் வட்டாரத்தில் ஒர் உறுப்பினராக இருந்த முகமட் அரிப் சாப்ரி  அப்துல் அஜிஸை டிஏபி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகின்றது.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று ரவூப்பில் செராமா ஒன்றின் போது அந்தத் தகவலை  அறிவித்தார்.

2004 தொடக்கம் 2008 வரை புலாவ் மானிஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள முகமட் அரிப் நஜிப் தலைமை தாங்கும் பெக்கான் அம்னோ தொகுதியின் தகவல் பிரிவுத் தலைவராக 2000 முதல் 2004 வரை  பணியாற்றியுள்ளார்.

Sakmongkol AK47 என்னும் தமது வலைப்பதிவில் நிறைய எழுதி வரும் முகமட் அரிப், நஜிப் நிர்வாகத்தை அடிக்கடி குறை கூறி வருகிறார்.dap1

அவர் மூத்த அம்னோ உறுப்பினரான அஸ்பான் அலியாஸுடன் 2012 ஜனவரியில் டிஏபி-யில் சேர்ந்தார்.

ரவூப் மலாய் பெரும்பான்மைத் தொகுதியாகும். அங்கு மசீச உதவித் தலைவர் டாக்டர் இங் யென் யென் 2,752  வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார். அந்த வாக்குகள் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 8.2  விழுக்காடு என்பதால் பிஎன் -னுக்கு ‘ஆட்டமான’ தொகுதிகளில் அதுவும் ஒன்றாகும்.

dap2இதனிடையே பாகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த தெங்கு சுல்புரி ஷா ராஜா பூஜி-யை மெந்தகாப் சட்டமன்றத் தொகுதிக்கு டிஏபி நிறுத்தியுள்ளதாகவும் லிம் அறிவித்தார்.

தெங்கு சுல்புரி, மின்னியல் பொறியிலாளர் ஆவார். 2000ல் டிஏபி-யில் சேர்ந்த அவர், செலாயாங் நகராட்சி  மன்ற உறுப்பினராக பின்னர் நியமிக்கப்பட்டார்.

மெந்தகாப்பும் மலாய் பெரும்பான்மைத் தொகுதி ஆகும். இப்போது அது மசீச-வின் சுவா பூன் சியோங் வசம்  உள்ளது. 2008ல் அவர் 2,439 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

ஏற்கனவே ஜைரில் கிர் ஜொஹாரி டிஏபி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்  தேர்தலில் டிஏபி குறைந்தது மூன்று மலாய் உறுப்பினர்களைக் களமிறக்கும் என்பது இப்போது உறுதியாகி  உள்ளது.

 

TAGS: