உண்ணா விரதம் முடிந்தது, ஹிண்ட்ராப்புக்கு எந்த மாற்றமும் இல்லை!

waythaஉங்கள் கருத்து : ‘வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த உண்ணா விரதம் அவருடைய ஆரோக்கியதைப் பாதித்திருக்காது என நான் நம்புகிறேன். ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் நல்ல   எண்ணத்துடன் மீண்டும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்’

“வேதமூர்த்தி மயங்கி விழுந்தார் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்”

சின்ன அரக்கன்: பி வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. விரைவில் அவர் உடல் நலம் தேற பிரார்த்திக்கிறேன்.

ஹிண்ட்ராப் தலைவர்கள் மனதில் இப்போது என்ன ஒடுகிறது என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் பிரதமரைச் சந்தித்தது வெறும் கண் துடைப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என அவர்கள் உணர வேண்டும்.

பக்காத்தான் ராக்யாட்டுடன் அவர்கள் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதே நல்லது. பிஎன் வலைக்குள் விழுவதைக் காட்டிலும் அவர்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அதுவே வழி.

எஸ்கே: வேதமூர்த்தியின் பரிதாபகரமான சூழ்நிலைக்கு நடப்பு பிஎன் அரசாங்கம் பின்பற்றும் இன அடிப்படை நிர்வாகமே அடிப்படைக் காரணமாகும். எல்லா மலேசியர்களையும் பரிவுடன் கவனிக்கும் அரசாங்கத்தை பெறுவதே ஒரே தீர்வாகும்.

மலேசியர்களாகிய நாம் நமது பங்கை ஆற்ற வேண்டும். நாம் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அதனை அடைய உதவுவர் எனப் பிரார்த்திப்போம். என்றாலும் முதலில் நாம் இன அடிப்படை சிந்தனையை கைவிட வேண்டும். இல்லை என்றால் அரசியல்வாதிகள்  நம்மை தொடர்ந்து ஏமாற்றுவர்.

அடையாளம் இல்லாதவன்#19098644: பிஎன், பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கைகளில் ஹிண்ட்ராப் பெருந்திட்டம் கூடிய வரை அதிகமாக இடம் பெறுவதில் வேதமூர்த்தி இனிமேல் கவனம் செலுத்த வேண்டும். எந்தக் கூட்டணி அதிகாரத்துக்கு வந்தாலும் அதனுடன் இணைந்து தமது போராட்டத்தை அவர் வலுப்படுத்த வேண்டும்.

கொடூரமான உலகத்துக்கு எதிராக கூச்சல் போடுவதைக் காட்டிலும் வசதியற்றவர்களுடைய தேவைகள் முக்கியமான திட்டங்களில் இடம் பெறச் செய்வதில் கவனம் செலுத்துவதே நல்லது. உங்கள் போராட்டத்துக்கு உங்கள் மக்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் உயிர் வாழ வேண்டும்.

இடி மின்னல்: வேதா, இன்னொரு முறை மரணத்துடன் விளையாட வேண்டாம். நீங்கள் மீண்டும் ஆரோக்கியமாகத் திகழ மருத்துவர்கள் உதவட்டும். மீண்டும் எழுந்து போராடுங்கள்.

13வது தேர்தலுக்கு இன்னும் சில காலம் இருக்கிறது. அதனால் பக்காத்தானுடன் பேசி உடன்பாடு செய்து கொள்ளுங்கள் அல்லது புதிதாக சுத்திகரிக்கப்பட்ட அம்னோ/பிஎன் நஜிப் ரசாக்குடன் உடன்பாடு செய்து கொள்ளுங்கள். சமரசம் தான் ஒரே வழி.

நியாயமானவன்: டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், கௌரவமான வழியைக் காட்டியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டு விடுங்கள். எந்த வேறுபாடும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் ஹிண்ட்ராப் பொருத்தமற்றதாகத் தான் இருக்கப் போகிறது.

தோலு: இந்த நாட்டில் இந்தியர் பிரச்னைகள் மீது வேதா தமது ஆரோக்கியத்தைப் பணயம் வைப்பதைக் காண ஹிண்ட்ராப் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் விரும்பவில்லை.

அவர் தமது சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலையை உயர்த்த அவர் கொண்டுள்ள உறுதியையும் சுயநலமற்ற போக்கையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அதற்கான அவர் தமது ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

பியாட் ஜுஸ்டியா: வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த  உண்ணா விரதம் அவருடைய ஆரோக்கியதைப் பாதித்திருக்காது என நான் நம்புகிறேன். ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் நல்ல எண்ணத்துடன் மீண்டும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்.

கொஹிடோ எர்கோ சும்: பகுத்தறிவு மலரட்டும். பக்காத்தான் மட்டுமே கவலை தெரிவித்துள்ளது. நீங்கள் செயலிழக்க வேண்டும் என உங்கள் பிஎன் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். காரணம் முழு வேகத்துடன் நீங்கள் பேரம் பேச முடியாமல் போக வேண்டும் என அவர்கள் எண்ணுவதாகும். பக்காத்தானில் இணைவது இந்தியர்களுடைய போராட்டத்தைக் கைவிட்டதாக அர்த்தமாகாது.

ஒரு காலத்தில் நீங்கள் ஹீரோக்களாக இருந்தீர்கள். மீண்டும் ஹீரோக்களாக வேண்டும்.

TAGS: