தேர்தலில் வெற்றி பெற்றால் பக்காத்தான் ‘அந்நியச் செலாவணி ஊழலை’ புலனாய்வு செய்யும்

BNMஅடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றால் 1990-களின்  தொடக்கத்தில் பாங்க் நெகாரா மலேசியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய அந்நியச் செலாவணி ஊழல்  விசாரிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் நோர் முகமட் யாக்கோப்பின் பங்கு எனக்   கூறப்படுவது மீது கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

அந்த ஊழலில் ஏற்பட்ட 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்புக்கு விளக்கம் அளிக்குமாறு நோர் முகமட் கேட்டுக் கொள்ளப்படுவார் என அவர் தெரிவித்தார்.

1993ம் ஆண்டுக்கான பாங்க் நெகாரா அறிக்கையில் அந்தத் தொகை காணப்படுகின்றது. அதனை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் வெளியிட்டார்.

BNM1“அவர் தமது 20 ஆண்டு கால மௌனத்தைக் கலைக்கத் தவறினால், புத்ராஜெயாவில் அரசாங்க மாற்றம்  ஏற்பட்டால் நோர் முகமட் விசாரணைக்கு அழைக்கப்படுவார்,” என லிம் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

“அந்தப் பணம் எங்கே போனது என்பதைக் கண்டறிய பக்காத்தான் அரசாங்கம் முழு அளவில் விசாரணையைத் தொடங்கும்.”

“அந்தப் பணம் எங்கே போனது என்பதை அவர் விளக்கத் தவறினால் அந்தப் பணத்தை அவர் வைத்திருக்கின்றாரா என மக்கள் வினவக் கூடும். இழப்பு எப்படி ஏற்பட்டது என்பதையும் மக்கள் அறிய விரும்புவர்.”

“நோர் முகமட் எம்பி-யாக இருக்கும் தாசேக் குளுகோர் மக்கள் உண்மையைக் கோருகின்றனர். நேர்மையும் பொறுப்பும் உள்ள நாடாளுமன்றப் பேராளர் ஒருவரையே குளுகோர் மக்கள் விரும்புகின்றனர்,” என பினாங்கு முதலமைச்சருமான லிம் சொன்னார்.

BNM2ஏழாவது முறையாக உலக ஸ்குவாஷ் விருதைப் பெற்றுள்ள பினாங்கைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை நிக்கோல் டேவிட்-டிடம் 100,000 ரிங்கிட்டுக்கான மாதிரிக் காசோலையை நேற்று வழங்கிய பின்னர் லிம் நிருபர்களிடம் பேசினார்.

1968ம் ஆண்டு பாங்க் நெகாராவில் சேர்ந்த நோர் முகமட் அதன் அந்நியச் செலாவணிப் பிரிவுக்குத் தலைவராக இருந்தார். 1990 தொடக்கத்தில் நிகழ்ந்த அந்த அந்நியச் செலாவணி ஊழலில் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது பக்காத்தான் தலைவர்கள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அது குறித்து கருத்துரைக்க நோர் முகமட் மறுத்துள்ளார்.

அவரை தற்காத்த துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அந்த ஊழல் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோளை நிராகரித்தார். அது ‘பழைய கதை’ என்றும் முஹைடின் கூறிக் கொண்டார்.

TAGS: