பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார்.
தெங் “சர்க்கஸ் கோமாளி”போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று லிம் கூறினார்.
எனவே, “இனியும் இந்த ஆட்டத்தில் ஈடுபட ஆர்வமில்லை”, என்றாரவர்.
“நேற்று தெங் விடுத்த அறிக்கையிலிருந்து சவால் விட்ட அவருக்கு அதை நிறைவேற்றும் எண்ணம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது”, என இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் தெரிவித்தார்.
“டிஏபி தலைமைச் செயலாளர் என்ற முறையில் நாடாளுமன்ற இடத்துக்குப் போட்டியிடும் பொறுப்பு எனக்குண்டு என்ற போதிலும் அதையும் கூட விட்டுக்கொடுத்து இவரின் அபத்தமான நிபந்தனையை ஏற்று சட்டமன்றத்துக்கு மட்டுமே போட்டியிட முன்வந்தேன்”, என்றாரவர்.
தெங், கினிடிவி-க்கு அளித்த நேர்காணலின்போது எதிர்வரும் தேர்தலில் தாம் லிம்மை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
லிம், மறுநாளே அதை வரவேற்றதுடன், தெங் ஏற்கனவே 2008-இல் தோற்கும்வரை மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள பாடாங் கோத்தாவிலேயே இருவரும் போட்டியிடலாம் என்றார்.