கேலாங் பாத்தா பிரகடனம் எல்லா இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி தரவில்லை

1dapஉங்கள் கருத்து : ‘என்னைக் கேட்டால், டிஏபி-இன் வாக்குறுதிகளை ஏற்போம். அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்’

இந்தியர்களுக்கான டிஏபி-இன் 14-அம்சத் திட்டம்

ஜெரார்ட் லூர்துசாமி: டிஏபி-இன் இந்த 14-அம்சத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை அம்னோ/பிஎன்னால் கொண்டு வர முடியுமா? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போதாவது செய்திருக்கிறார்களே.

இந்தியர்கள், மலேசியாவில் மற்ற இனங்களிலும் உள்ள ஒதுக்கப்பட்டவர்கள் போலவே தங்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

வேண்டியவர்களுக்கே முன்னுரிமை பொதுமக்கள் அப்புறம்தான் என்ற அம்னோ/பிஎன் கொள்கையைப் போல் அல்லாமல் பக்காத்தானின் தேவையை அடிப்படையாகக் கொண்ட கொள்கை இத்தரப்பினருக்கு பேருதவியாக இருக்கும்.

இண்ட்ராபும்  நிலைமை  அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். மற்ற இனத்தவரும் குறிப்பாக ஓராங் அஸ்லிகள், கிழக்கு மலேசிய பூர்விகக் குடிகள் போன்றோரும் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.  அம்னோ / பிஎன் இந்தியர்களைத் தீண்டத்தகாதவர்களாக நினைத்து அவர்களின் பிரச்னைகளுக்குக் குறுகிய-காலத் தீர்வு காண்பதையே வழக்கமாக வைத்துள்ளது.

பக்காத்தான், இந்தியர் விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதில் மெதுவாக செயல்பட்டாலும் ஒரு முழுமையான அணுகு முறையை அவர்கள் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

அரசியல் சாராப் பார்வையாளன்: இந்த கேலாங் பாத்தா பிரகடனம் இந்தியர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறும் ஒரு முயற்சியாகும். அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பலவற்றை மாநில அளவில், குறிப்பாக சிலாங்கூரில் செயல்படுத்தியிருக்க முடியும். அங்குதான் தோட்டப்புறங்களிலிருந்து வெளியேறிய இந்தியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் அங்கு வேலையில்லா இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கும் சிறுசிறு குற்றச்செயல்களில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடவும் காரணமாகும்.

அத்திட்டத்தை ஏன் சிலாங்கூரில் செயல்படுத்தவில்லை? கல்வி போன்ற சில விசயங்களைத் தவிர்த்து மற்றவற்றை சிலாங்கூரில், பிகேஎன்எஸ் மூலமாக செய்திருக்க முடியும்.ஆனால், செய்யவில்லை.

ஏனென்றால், பக்காத்தானுக்கு இந்தியர் நலனில் அக்கறை இல்லை. அதற்கு அவர்களின் வாக்குகள் மட்டுமே தேவை.

இப்படிப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை இந்தியர்கள் நம்புவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். இத்திட்டம் இண்ட்ராபின் செயல்திட்டம் போன்றே இருக்கிறது.பேசாமல் பக்காத்தான் அதையே ஏற்றுக்கொண்டிருக்கலாமே.

தொலு: இந்தியர்களுக்கு என்ன வந்துவிட்டது?   பிஎன்னும் பக்காத்தானும் இண்ட்ராபின் செயல்திட்டம்மீது கவனம் செலுத்தவில்லை என முறையிடுகிறோம். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக டிஏபி ஒரு திட்டத்தை முன்வைத்தால் அதைக் கேலி  செய்கிறோம்.

இப்படியே போனால், இந்நாட்டில் இந்தியர்களைக் காக்க இறைவன்தான் வர வேண்டும். ஆனால், “இறைவன் தனக்குத்தானே உதவிக்கொள்வோருக்குத்தான் உதவுவான்” என்று சொல்லப்படுவதையும் மறக்கக் கூடாது.

என்னைக் கேட்டால், டிஏபி-இன் வாக்குறுதிகளை ஏற்போம். அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

முற்போக்கு: இந்த ‘கேலாங் பாத்தா பிரகடனம்’ இந்தியர்களுக்கு உதவும். லிம் கிட் சியாங் ஒரு நம்பத்தக்க தலைவர்.

இந்தியர்களின் நிலையைக் கவனப்படுத்தியதற்காகவும் அவர்களின் துயர்தீர போராடுவதற்காகவும் இண்ட்ராபை மதிப்போம். ஆனால், இந்தியர்களின் வாக்குகளை எல்லாம் ஒரு இரும்புப் பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்து திறவுகோலைத் தன் கையில் வைத்திருப்பதுபோல இண்ட்ராப் பேசுதல் கூடாது. அது உண்மையும் அல்ல.

பெரும்பாலான இந்திய மலேசியர் மாற்றத்துக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். அதன்பின் பக்காத்தான் அதன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோருவார்கள்.

பெயரிலி$&@?: இதில் அமைச்சர் பதவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை, 10 விழுக்காடு குத்தகை பணிகள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, இண்ட்ராப் இதை ஏற்கும் என்று எண்ணவில்லை. நான் நினைப்பது தப்பாக இருக்கட்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

எஸ்.எஸ். டாலிவால்: இண்ட்ராப் செயல்திட்டம் நியாயமற்றது. அது ஏற்கப்படக்கூடாது. அப்போதுதான் அதைக் காரணம்காட்டி பக்காத்தானுக்குக் குழி பறிக்கலாம் என்ற எண்ணத்தில் தயாரிக்கப்பட்ட திட்டம் அது.

பக்காத்தான் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டபோது குறைகூறப்பட்டது. ஆனால், பக்காத்தான் இதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. சந்தர்ப்பவாத இண்ட்ராப்பைத் திருப்திப்படுத்த முடியாது. அவர்களை பிஎன் ஏற்கனவே விலை கொடுத்து வாங்கிவிட்டது.

எடிஜே:  நல்ல திட்டம்தான். ஆனால், பிற்போக்கான திட்டம்போலவும் தெரிகிறது. மற்ற இனங்களின் நிலை என்ன? அவர்களுக்கும் இப்படி ஒரு “திட்டம்” தேவைதானே? அரசியல்கட்சிகள் ஒவ்வோர் இனத்துக்கும் இப்படிப்பட்ட திட்டங்களை உருவாக்கிக்கொண்டு போனால் நிலைமை என்னவாகும்?

ஜீன் பியர்: திட்டம், தேர்தல் கொள்கை அறிக்கை, செயல்திட்டம் என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழையுங்கள். இண்ட்ராப் எதிர்பார்தது நடந்துள்ளது.

இதைவிட அதிகமாக பிஎன்னால் கொடுத்துவிட முடியாது. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக இண்ட்ராப் விளங்க வேண்டும். இத்திட்டம் உருவானதற்கு வேதாவும் ஒரு காரணமாகும். அவர் இப்போது என்ன செய்யப்போகிறார்?

TAGS: