சிலாங்கூர் தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் சுல்கிப்ளி அப்துல் ரஹ்மான், அம்னோ உதவிப் பதிவதிகாரி ஒருவர் சந்தேகத்துக்குரிய பலரை வாக்காளர்களாக பதிவு செய்தார் என்று தெரிவித்ததாக டிஏபி-இன் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு கூறினார்.
சுல்கிப்ளியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியபோது அதை ஒப்புக்கொண்டார் என்றாரவர்.
அதே உதவிப் பதிவதிகாரி, பிரிட்டனில் வசிக்கும் தினேஷ், 32, என்பாரைத் தன் அனுமதியின்றி ஒரு வாக்காளராக கடந்த ஆண்டில் பதிவு செய்தார் என்பதை இசி இதற்குமுன்பு கூறியுள்ளது.
“அந்த மனிதர் எத்தனை பேரை இப்படி பதிவு செய்துள்ளார் என்று கேட்டதற்கு ‘பலரை’ என்றவர் பதிலுரைத்தார்”, என சார்ல்ஸ் கூறினார்.
ஆனால், தினேஷின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க இயலாது என்று சுல்கிப்ளி கூறியதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார். ஏனென்றால், தேர்தல் சட்டம் பகுதி 9(ஏ), அரசிதழில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் அகற்றப்படுவதைத் தடுக்கிறது.
“அந்தச் சட்டத்தைக் காட்டி அதன் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். சட்டம் மீறப்பட்டதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்”, என்று சார்ல்ஸ் இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அக்கூட்டம் சிலாங்கூர் இசி கட்டிடத்தில் நடந்தது. ஆனால், சுல்கிப்ளி அங்கில்லை.
உதவிப் பதிவதிகாரிக்கு எதிராக போலிசில் புகார் செய்யுமாறு கூறியதற்கு இசி புத்ரா ஜெயாவில் உள்ள அதன் சட்ட அலோசகர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சார்ல்ஸிடம் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகத்துக்குரிய பெயர்கள் இருந்தால் கொண்டு வாருங்கள்
வெளிநாட்டில் உள்ள தினேஷுக்காக வேறு ஒருவர் வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டியதற்கு இசி அளித்த பதில் மனநிறைவளிக்கவில்லை என்று சார்ல்ஸ் கூறினார்.
“சந்தேகத்துக்குரிய பெயர்கள் இருந்தால் கொண்டு வாருங்கள் அப்போதுதான் அவற்றைத் தேர்தல் முகவர்களிடம் கொடுத்து அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்க முடியும் என்றார்கள். இது அபத்தமாக இருக்கிறது. அது எங்கள் வேலை அல்லவே”, என்றாரவர்.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்குக் குடிநுழைவுத் துறை “உடந்தையா” என்று வினவியதற்கு இசி அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
“நான் சொல்லியதை அவர்கள் மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை. அமைதியாக இருந்தார்கள். தினேஷ் வெளிநாட்டில் இருப்பது அம்னோ ஆளுக்கு எப்படித் தெரியும்? குடிநுழைவுத்துறைதான் அத்தகவலைக் கொடுத்திருக்க வேண்டும்”, என்றவர் சுட்டிக்காட்டினார்.
தம் தொகுதியில் மட்டும் வெளிநாடுகளில் வசிக்கும் ஆறு மலேசியர்கள் அவர்களின் சம்மதமின்றியே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக சார்ல்ஸ் கூறினார்.