வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் செய்கின்றனர்.
2008ல் தாமான் மேடான் தொகுதியில் வாக்களித்த சம்சியா அரிபின் என்பவர் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத்
தொகுதிக்கும் கிளானா ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் ஹனிஸா முகமட் தால்ஹா கூறினார்.
தமது பெயர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அண்மையில் தான் சம்சியா கண்டுபிடித்தார் என்றும் அவர் சொன்னார்.
சம்சியா தமது உதவியைக் கோரியதாகத் தெரிவித்த சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகருமான ஹனிஸா, “நாங்கள் அவருடைய தகுதியைச் சோதனை செய்தோம். அவர் 2008ல் தாமான் மேடானில் வாக்களித்துள்ள வேளையில் இப்போது அவர் ஸ்ரீ செத்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது,” என்றார்.
“இது போன்ற சம்பவங்கள் என்னுடைய தொகுதியிலும் நுருல் இஸ்ஸா சுட்டிக்காட்டியுள்ளது போல லெம்பா பந்தாய் தொகுதியிலும் மட்டுமின்றி வேறு பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளன,” என ஹனிஸா மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை இடம் மாற்றி வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.
பெட்டாலிங் ஜெயா செலத்தான் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் தாமான் மேடான் சட்டமன்றத் தொகுதியில் 4,000 முதல் 5,000 புதிய வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
சிலாங்கூரில் வாக்காளராக இருக்கும் 64 வயது மாது ஒருவருடைய பெயர் பினாங்கில் வாக்காளராக காணப்படும் விஷயத்தை அண்மையில் தாம் வெளியிட்டதாகவும் ஹனிஸா குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். அதனால் வாக்காளர் பட்டியலை சோதனை செய்வதை அது தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.