ஹாடி: ‘தேர்தல் தேதிக்காக பிஎன் போமோவைப் பார்க்கிறதோ, என்னவோ’

1hadiதேர்தல் தேதியை முடிவுசெய்ய பிஎன் தலைவர்கள் போமோவைப் பார்க்கிறார்களோ என்னவோ – அதனால்தான் நாடாளுமன்றக் கலைப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது என்று கிண்டலடித்தார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.

“முஸ்தபா அலி (பாஸ் தலைமைச் செயலாளர்) சாத்தியமான தேர்தல் தேதி குறித்து சற்றுமுன்னர் கூறினார். நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிஎன் தலைவர்கள் முதலில் போமோவைத்தான் பார்ப்பார்கள்”, என்று கோலாலும்பூரில், செய்தியாளர் கூட்டமொன்றில் ஹாடி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

“அம்னோ போமோ சொல்லும் தேதிகளைதான் நம்பும். தேர்தல் முஸ்தபா  சொன்ன தேதிகளில் இருக்காது”, என்றார்.

ஹாடி, கோலாலும்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் ஊடக மையத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

1hadi1பாஸும் அதன் தோழமைக் கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒன்றுபட்டு நிற்பதாக அவர் கூறினார்.

முன்னதாக பேசிய முஸ்தபா, பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், புருணையில் ஏப்ரல் 24, 25-இல் நடக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதால் ஏப்ரல் 26 அல்லது 27-இல்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.

“அம்மாநாட்டுக்கு முழு பிரதமராக செல்வதையே அவர் விரும்புவார். பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமராக செல்ல விரும்பமாட்டர்”, என்றாரவர்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கடந்த வாரம் தானாகவே கலைந்து விட்டதால் அங்கு  60 நாள்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஹாடி கூறினார்.

தேர்தல் ஆணையம் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த விரும்புவதால் மே 25 அல்லது 26-இல் அது நடத்தப்படலாம்.

“ஆக, மே-இல்தான் தேர்தல். ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால் அப்போதுதான் நடத்த வேண்டும். அதற்குப் பின்னர் முடியாது”, என்று ஹாடி கூறினார்.

TAGS: