பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி துரைராஜூ போட்டியிடுவார் என்று லிம் குவான் எங் அறிவித்த போது அங்கு திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி காமாட்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர் தனது உரையில், 2008 பொது தேர்தலில் 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தனது தொகுதியிலேயே தங்கி சேவையாற்றி வந்த காமாட்சியே போட்டியிட சிறந்த தேர்வு என்று கூறினார். இம்முறை காமாட்சி நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என தாம் நம்புவதாகவும் கூறினார்.
சாபாய் சட்டமன்ற வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த திருமதி காமாட்சி துரைராஜூ, “நான் இன்று சட்டமன்ற வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றால் அதற்கு காரணம் காராக் மக்களின் வற்றாத ஆதரவுதான். அந்த ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் இம்மி அளவும் பங்கம் வராமல் அவர்களுக்கு சேவை செய்வதே என் கடமையாக இருக்கும். 5000-க்கு மேல் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு முன் என்னை வேட்பாளராக அறிவித்தது என் வாழ்வில் நடந்த புதிய அனுபவம். கடந்த தேர்தலில் இதுவெல்லம் நடக்க கால அவகாசம் இல்லை. ஆனால், நேற்று கிடைத்த அங்கிகாரம் என்னை மனம் நெகிழ வைத்துவிட்டது என்றார்.
மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி எனது சேவையை தொடர்வேன். சேவையை மையமாக கொண்டதே எனது அரசியல் பயணம்; இங்கு சுயநலத்திற்கு இடமே இல்லை. கட்சிக்கும் மக்களுக்கும் என்றும் நம்பிக்கையாக நடந்து கொள்வேன் என மேலும் கூறினார்.
சபாய் சட்டமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறிய காமாட்சி, தன்னை கட்சிக்கு அறிமுகப்படுத்திய நாடளுமன்ற உறுப்பினர் மனோகரன், மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோருக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.