ஓட்டை பாக்கெட்!

kulaஎம். குலசேரகன்,  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், 02.04.2013

இன்றைய மலேசிய தமிழ் நாளேடுகளில் வெளிவந்த துணை அமைச்சர் சரவணனின் ஓட்டை  பாக்கெட் என்ற தலைப்பிலான செய்தியைப் படித்து நகைத்து நின்றேன். எங்களின் பாக்கெட் ஓட்டைதான்  அதில் பணம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து பாக்கெட்டில் போடுவது எங்கள் பாணியல்ல.

ஜசெகவின் 14 அம்ச கேலாங் பாத்தா திட்டம், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடவல்ல நற்சிந்தனையாக இருப்பது வரவேற்கக் கூடியத்துதான் என்று கூறிய நீங்கள், அக்கட்சிக்கு அதனை செயல் வடிவில் கொண்டு வரும் ஆற்றல் இல்லை என்று கூறியுள்ளீர்கள். எந்த ஆதாரத்துடன் இப்படிக் கூறினீர்கள் என்று நீங்கள் விளக்கவில்லை. பினாங்கு மாநிலத்தின் ஆட்சித் திறமைக்கு சான்றாக மத்திய அரசின் கணக்காய்வாளர்  வெளியிட்ட அறிக்கையே ஜசெகவின் திறமைக்கு ஒரு சான்றாகும்.

மேலும், ஐந்து  வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்யும்  நாங்கள் செய்த மற்ற சாதனைகள் உங்ளுக்கு தெரிய வேண்டுமா? முதன் முதலாக ஓர் இந்தியரை பினாங்கில் துண முதல்வராக்கியது, ஒரு தமிழ்ப் பெண்ணை சட்ட சபை செயலாளர் ஆக்கியது, பேராவில் ஓர் இந்தியரை சபாநாயகராக்கியது, பினாங்கு மாநிலத்தில் சாலைகளின் பெயர்களில் தமிழை இடம்பெறச் செய்தது. இவ்வளவு குறுகிய ஆட்சி காலத்தில் இவ்வளவு அதிக சாதனைகளைச் செய்த ஜசெகவிற்கு திறமையும் ஆற்றலும் இல்லை என்று எப்படி கூறமுடியும்?

அரசியல் என்பது என்னேரமும் மாறிக்கொண்டேயிருக்கின்ற சுறுசுறுப்பான தன்மையைக் கொண்டநீரோடை. அதுவும் தேர்தல் வரும் இந்த நேரத்தில் அதன் வேகம் இன்னும் அதிகரிந்துக்கொண்டே போகும். நாட்டின் அரசியல் சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்பவே அரசியல் அறிக்கைகளும் மெருகூட்டப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான், இந்திய சமூகத்தினரின் எதிர்ப்பார்ப்பைக் கவனித்தில் கொண்டு இந்த கேலாங் பாத்தா அறிக்கை வெளியிடப்பட்டது. அதே வேளையில், இந்தியர் நலன்கள், அன்வார் இப்ராஹிம் விடுத்த அறிக்கையில் விடுபட்டு போனது என்பது தவறான கருத்தாகும். ஜசெக தனது தேவைக்கேற்ப என்ற (need base) கொள்கையை முன்னிறுத்தி இனரீதியான (race based)  அரசியலை  பின்தள்ளும் ஒரு கட்சி. அந்த அடிப்படையில்தான்  அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட முதல் அறிக்கையும் அமைந்தது.  கேலாங் பாத்தா அறிக்கையானது இந்திய சமூகத்தின் நடப்பு எதிர்பார்ப்புகளையும் அரசியல் சவால்களையும் உள்ளடக்கி அன்வார் வெளியிட்ட முதல் அறிக்கையை விவரித்து கூறும் ஒரு முழுமையான அறிக்கையாகவே உள்ளது.

m.saravananசரவணனன் அவர்களே, இதுவரை நீங்கள் மஇக சார்பாக உங்களின் தேர்தல் அறிவிப்பை வெளியிடாததின் ரகசியம் என்ன?

ஜசெக வின் தலைவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஓர் அறிக்கை விட்டாரென்றால் அது அன்வார் இப்ராகிமின் சம்மதத்துடந்தான் வெளிவந்துள்ளது என்பதனை  தெரிந்து கொள்ளுங்கள். சரவணன் ஜசெக இந்தியர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போரடவில்லை என்பது போல சொல்லவருகிறார். முன்னாள் அரசியல் ஜம்பாவான்களான P பட்டு, V.டேவிட் போன்ற ஜசெக தலைவர்கள் சமுதாயத்திற்கு போரடியதற்காக சிறை சென்றார்கள். இன்று உள்ள தலைவர்களில் கர்ப்பால் சிங், கெங்காதரன், வசந்தகுமார், கணபதி ராவ், மனோகரன் மலையாளம் ஆகியோரும்கூட சமூகத்தின் நலனுக்காக போராடி சிறை சென்றார்கள். ம.இ.காவினர் எத்தனை பேர் சமுதாயத்திற்கு போரடி சிறை சென்றார்கள் என்று கூற முடியுமா?

சமுதாய நலன்களைப் பின்தள்ளி சலுகைகளுக்ககாவும் மானியத்திற்காகவும் கெஞ்துவதுதான் மஇகாவின் சாதனை. மஇகா மாநாடுகள் நடைபெறும் போதெல்லாம் இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று கூறி வரும் நீங்கள் அதன் தலைவிதியை மாற்ற ஜசெக முயற்சி செய்தால் அதனை கீழறுப்பு செய்வதற்காகவே அறிக்கை விடுகின்றீர்கள். நீங்களும் செய்யமாட்டீர்கள், எங்களையும் குறைகூறுகின்றீர்கள். என்னதான் வேண்டும் உங்களுக்கு  நல்ல பரிந்துரைகள் இருந்தால் சொல்லுங்கள் அவற்றையும் எங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்கிறோம்.

இந்தியர்களின் ஏகபோக பிதிநிதியாக தன்னை பிரகடப் படுத்திகொண்டுள்ள மஇகா கடந்த 55 வருடங்களுக்காக உண்மையிலேயே போராடியிருந்தால் இந்தியர்கள் எப்பொழுதோ   இந்நாட்டின் தேசிய நீரோடையில் கலந்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருப்பார்கள். இவ்வளவு காலம் மஇகா செய்ய முடியாததை இந்த தேர்தலுக்குப்பின் செய்யும் என்ற உறுதி மொழி தர்க்க சாஸ்திரத்துக்கு எதிரானது. மக்களே மஇகாவினர் மீது நம்பிக்கை இழந்து மாற்றத்தை நோக்கி நகரும் பொழுது மஇகாவினரின் கூப்பாடு அவர்களின் காதில் விழப்போவதில்லை என்பதைத்தான் வருகின்ற 13 பொதுத்தேர்தலின் முடிவுகள் சொல்லும். அப்பொழுது பார்ப்போம் ஓட்டைப் பாக்கெட்டு யாரிடமுள்ளதென்று!

சரவணன் அவர்களே, உங்கள் அதிகாரத்திற்குள் வரும் புக்கிட் ஜாலில் தோட்டப் பிரச்சனையையே  தீர்க்க முடியாத நீங்கள் மற்ற கட்சிக்குள் மூக்கை நுழைத்து சாதிக்கப் போவதென்ன?

ஒற்றுமைப் பொங்கள் என்ற பெயரில் 50 லட்சம் வெள்ளி வாரி இறைத்து இந்திய சமுதாயத்திற்கு என்ன சாதனை புரிந்தீர்கள்?  இதனால் சமுதாயம் ஒற்றுமை அடைந்துவிட்டதா? நல்ல ஆற்றலும் மதிநுட்பமும் இருந்திருந்தால் இந்த பணம் எத்தனயோ ஏழை இந்திய மாணவர்களின் கல்விக்கோ  அல்லது ஏழை இந்திய குடும்பங்களுக்கோ உதவியாக இருந்திருக்கும். எந்த பிரதமராக இருந்தாலும் அவர்களின் புகழ் பாடுவதையே வாடிக்கையாகக் கொண்ட ம.இ.கா வேறு உறுப்படியான காரியம் எதனையும் இந்த சமுதாயத்திற்காக  செய்ததுண்டா? கடந்த 35 ஆண்டுகளாக இந்தியர்கள் பல சமுதாய உரிமைகளை பறிகொடுத்து இருப்பதுதான் உண்மை. ம.இகாவினால் பெற்றதை விட இழந்ததுதான் அதிகம். மஇகா தலைவர்கள் என்றுமே ஜமீந்தார்களைப் போலவும் சாதாரண இந்தியர்கள் அவர்களின் அடிமைகளைப் போலவும்  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியர்கள் ஏழைகளாக இருக்கும் வரையில்தான் மஇகாவினரால் ஏய்த்து பிழைக்க முடியும் என்பதுதான் உண்மை.

1976ல் மஇகா பேராளர் மாநாட்டில் நிறவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியர்களின் சொத்துடைமை குறுகிய காலத்தில் 12%  அடையும் என்று கூறியிருந்தீர்கள். இன்று வரை அந்த நிலை அடையாமல் 1.0 % இருக்கிறதே அதற்கு ம.இ.காவின் பதில் என்ன?

இந்தியர்களின் பொருளாதார மேன்மைக்கு உதவும் என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட  மைக்கா ஹோல்டிங்ஸ் என்ற கஜானாவை  ஒட்டைப் போட்டது நீங்களா? ஜசெகவா? டெலிகோம்ஸ் பங்குகளை கடத்தியது யார்? இதிலிருந்து உங்களின் நிர்வாகத் திறமையும் மதிநுட்பத்தின் லட்சணமும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது! மஇகா இல்லையென்றால் இந்தியர்கள் எல்லாரும் தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்றோ பசிப்பட்டினியால் மடிவார்கள்  என்றோ எண்ண வேண்டாம். மஇகா இல்லை என்றால் இன்னும் எத்தனையோ கட்சிகள் இந்தியர்களை பிரதிநிதிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன.

TAGS: