ஜோகூர் பாருவில் பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி

pkrஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஒய்வு பெற்ற ஜெனரல் முகமட் ஹஷிம் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் தெப்ராவ் தொகுதியில் ஸ்டீவன் சூங்-கும் மூவாரில் நோர் ஹிஸ்வானும் பத்து பஹாட்டில் இட்ரிஸ் ஜாவ்சியும் களமிறக்கப்படுவதாக எதிர்த் தரப்புத் தலைவரும் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார்  இப்ராஹிம் நேற்றிரவு அறிவித்தார். அவை அனைத்தும் நாடாளுமன்றத் தொகுதிகள்.

சூங், பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஆவார். அவர் ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்-கிற்கு மிகவும் அணுக்கமானவர்.

எம்ஏஎஸ்-ஸில் பணியாற்றியுள்ள நோ ஹிஸ்வான் மூவாரில் பிறந்தவர். அம்பாங் பிகேஆர் தொகுதியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் மூவார் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இட்ரிஸ் ஜாவ்சி, Wadah Pencerdasan Umat Malaysia (Wadah) அமைப்பின் உதவித் தலைவர், Angkatan Belia Islam Malaysia (Abim) அமைப்பின் முன்னாள் தலைவர்.

அவர் பிடிஎன் என்ற Biro Tata Negara -வின் துணைத் தலைமை இயக்குநராக பணியாற்றிய காலத்திலிருந்து அன்வாருடன் நட்புக் கொண்டிருந்தார்.

ஜோகூர் பாரு கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி -யில் சில ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அன்வார் அந்த அறிவிப்புக்களை விடுத்தார்.

ஏற்கனவே டிஏபி தனது இரண்டு முக்கியப் பிரமுகர்களை ஜோகூரில் களமிறக்கியுள்ளது.

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், கேலாங் பாத்தாவிலும் புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங் குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவ உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜோகூர் பாரு தொகுதி அம்னோவின் ஷாரிர் சாமாட் வசம் உள்ளது. அவர் 2008ல் Parti Rakyat Malaysia-வின் ஹசான் கரீமை 25,349 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

 

TAGS: