மசீச இளைஞர் தலைவருக்கு எதிராக ஒரு கிறிஸ்துவரை நிறுத்த பாஸ் தயாராகிறது

pasவரும் தேர்தலில் ஜோகூர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு முன்னணி போர்க்களமாக மாறி வரும் வேளையில் பாஸ்  கட்சி தனது முஸ்லிம் அல்லாதார் பிரிவிலிருந்து இருவரை அந்த மாநிலத்தில் இறக்குவதற்கு ஆயத்தமாகி  வருகின்றது.

அது பிஎன் கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் ஊடுருவ பக்காத்தான் ராக்யாட் வகுத்துள்ள திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாஸ் ஆதரவாளர்கள் மன்றத் தலைவர் ஹு பாங் சாவ் சாத்தியமான வேட்பாளர்களில் ஒருவர் ஆவார். அவர்  ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் -கிற்கு எதிராக நிறுத்தப்படலாம்.

அந்தத் தென் மாநிலத்தில் தாம் நிறுத்தப்படலாம் என தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது கிறிஸ்துவரான ஹு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.hu

ஆனால் தாம் எந்தத் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

ஹு -வுக்கு பரிசீலிக்கப்படும் தொகுதிகளில் ஆயர் ஹீத்தாமும் ஒன்று என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின்  யூசோப் உறுதி செய்துள்ளார்.

இறுதி முடிவை கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவிப்பார் என அவர் சொன்னார்.

ஆயர் ஹீத்தாம் 57 விழுக்காடு மலாய்க்காரர்களையும் 39 விழுக்காடு சீனர்களையும் 4 விழுக்காடு இந்தியர்களையும் கொண்ட கலப்பினத் தொகுதியாகும்.

சலாஹுடின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியிலும் நூசா ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவார்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பாஸ் ஆதரவாளர் மன்ற மகளிர் பிரிவுத் தலைவி குமுதா ராமன் சட்டமன்றத் தொகுதிக்கு நிறுத்தப்படுவார் என்பதை சலாஹுடின் உறுதி செய்துள்ளார்.

ஒர் இந்துவான குமுதா, திராம் தொகுதியில் போட்டியிடுவார் என அறியப்படுகின்றது. அவர் அந்தத் தொகுதியில் 2008ல்  பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டார். அம்னோ வேட்பாளர் மாவ்லிசான் பூஜாங்கிடம் 8,178 வாக்குகள்  வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

பாஸ் கட்சி அண்மையில் தனது ஆதரவாளர் மன்றத்தை கட்சியின் ஒரு பிரிவாக தரம் உயர்த்தியது. பாஸ் சின்னத்தில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்வதே அதன் நோக்கமாகும்.

பாஸ் கட்சி மலாக்காவில் பௌத்த சமயத்தைச் சார்ந்த ஒருவரை சட்டமன்றத் தொகுதி ஒன்றில் நிறுத்தும் என்றும் தெரிய வந்துள்ளது.

 

TAGS: