மக்களவை கலைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே 28க்குள் 13வது பொதுத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார்.
மார்ச் 28ல் இயல்பாகவே கலைந்து விட்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
“நாம் ஏப்ரல் 3ம் தேதியிலிருந்து கணக்கிட்டால் அந்த 60 நாள் காலம் ஜுன் 3ம் தேதி முடிவடைகிறது. ஆனால் அது நெகிரி செம்பிலானுக்கான மே 28 என்ற காலக் கெடுவை அது தவற விட்டு விடுகிறது,” என்றார் அவர்.
அப்துல் அஜிஸ், டிவி3ல் ஒளிபரப்பான ‘Soal Jawab’ நிகழ்ச்சியில் பேசினார். நேற்றிரவு ஒளிபரப்பான அந்த
நிகழ்ச்சியை மீடியா பிரிமா பெர்ஹாட்டின் செய்தி நடவடிக்கை, ஆசிரியர் பகுதி இயக்குநர் அகமட் ஏ தாலிப்
வழி நடத்தினார்.
வேட்பாளர் நியமனம், வாக்களிப்பு தினம் ஆகியவற்றுக்குச் சாத்தியமான தேதிகள் பற்றியும் அவரிடம்
வினவப்பட்டது.
“சில சாத்தியமான தேதிகள் உள்ளன. மற்ற இசி குழுவுடன் நான் விவாதிக்க வேண்டியிருப்பதால் அவற்றை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது,” என அவர் பதில் அளித்தார்.
தேர்தல் தேதியை தேர்வு செய்யும் போது சமயத் திருவிழாக்கள், வானிலை, பெரிய நிகழ்வுகள் ஆகிய பல
அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.
“பள்ளி விடுமுறைகள் எங்கள் பரிசீலினையில் இல்லை. இசி குழு உறுப்பினர்கள் கூடும் போது அவர்கள்
தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இறுதியில் ஏகமனதாக முடிவு எடுக்கப்படும்.”
இசி-யும் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் மோசடியில் ஈடுபடுவதாகக் கூறிக் கொண்டு 13வது பொதுத்
தேர்தல் நாட்டு வரலாற்றில் மோசமான பொதுத் தேர்தலாக இருக்கும் என சில தரப்புக்கள் சொல்வதை அப்துல் அஜிஸ் நிராகரித்தார்.
“13வது பொதுத் தேர்தல் மோசமாக இருக்கும் என நான் எண்ணவில்லை. அரசியல் கட்சிகள், கட்சி
வேட்பாளர்கள், சுயேச்சைகள், பார்வையாளர்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகிய எல்லாத் தரப்புக்களும்
இசி-க்கு ஒத்துழைப்பு அளித்தால் 13வது பொதுத் தேர்தல் சுமூகமாகவும் அமைதியாகவும் முறையாகவும்
நடைபெறும் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
முன் கூட்டியே வாக்களிப்பது, அழியா மையைப் பயன்படுத்துவது, வாக்காளர் பட்டியலைத் தொடர்ந்து
தூய்மைப்படுத்துவது உட்பட 19 புதிய நடவடிக்கைகளை தேர்தல் நடைமுறைகளில் இசி அறிமுகம்
செய்துள்ளதையும் அப்துல் அஜிஸ் சுட்டிக் காட்டினார்.
“வாக்களிப்பு நடைமுறைக்கு இடங்களையும் வாக்குச் சாவடிகளையும் வசதிகளையும் மட்டுமே இசி
வழங்குகிறது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் அல்லது தோல்வி அடைவார் என்பதை முடிவு செய்வது
வாக்காளர்களே,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா