சிலாங்கூரில் பக்காத்தான் மூத்த தலைவர்களுடைய கோட்டைகள் எனக் கருதப்படும் எட்டு தொகுதிகளில் மும்முனைப் போட்டியை ஏற்படுத்த மனித உரிமைக் கட்சி தயாராகி வருகிறது.
கோத்தா ராஜா, கிளானா ஜெயா, கோலா சிலாங்கூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஸ்ரீ அண்டாலாஸ், ஸ்ரீ மூடா, ஈஜோக், புக்கிட் மெலாவத்தி, ஸ்ரீ செத்தியா ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அந்தக் கட்சி எண்ணம் கொண்டுள்ளது. அந்தக் கட்சி ஹிண்ட்ராப் அமைப்பின் ஒரு கூறு ஆகும்.
அதன் தலைவர் பி உதயகுமார் சட்டமன்றத் தொகுதிக்கும் நாடாளுமன்றத் தொகுதிக்கும் போட்டியிடுவார்.
“P111 கோத்தா ராஜா-வுக்கும் N49 ஸ்ரீ அண்டாலாஸுக்கும் எங்கள் வேட்பாளர் பி உதயகுமார்,” என அந்தக் கட்சியின் தேசியப் பொருளாளர் ஏ சுகுமாரன் இன்று நிருபர்களிடம் கூறினார்.
2007ம் ஆண்டு சாலைகளில் ஆர்ப்பட்டம் செய்து பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஹிண்ட்ராப் பின்னர் சிதறி பல பிரிவுகளானது. அந்தப் பிரிவுகளில் ஒன்று மனித உரிமைக் கட்சியாகும்.
இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்தும் பாரிசான் நேசனலிடமிருந்தும் ஆதரவு பெற முயலும் இன்னொரு பிரிவுக்கு உதயகுமாரின் சகோதரர் வேதமூர்த்தி தலைமை தாங்குகிறார்.