பந்திங் புக்கிட் சீடிங் வெற்றிலை தோட்ட விவசாயிகளுக்கு நில உரிமம்

 

Xavier-Bukit Sidim

கடந்த திங்கட்கிழமை ஷா அலாம் சிலாங்கூர் மாநில அலுவலகத்திற்கு பந்திங் புக்கிட் சீடிம் வெற்றிலை தோட்ட விவசாயிகள் வருகைப் புரிந்தனர். அவர்களின் 33 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான்  அரசு மதிப்பளித்துத் தீர்வுகண்டுள்ளது. முன்னாள் புக்கிட் சீடிம் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய  குடும்பத்தினரின்  உபரி வருமானத்திற்காக வெற்றிலை பயிரிட்டு வந்த அரசாங்க தரிசு நிலத்தை 2002 ஆம் ஆண்டில் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் அபகரித்துக் கொண்டனர். சிலாங்கூர் மாநிலப்  பக்காத்தான்  அரசு முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள்  இழந்த நிலத்தை மீட்டு  அவர்களுக்குத் தலா  1\2 ஏக்கர் வீதம் நிலப் பட்டா வழங்க அங்கீகரித்துள்ளது என்பதை  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சேவியர் தெரிவித்தார்.

அவர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்த விவசாயிகளின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் நிகழ்வில் மேலும்  விளக்கமளித்த டாக்டர் சேவியர் காட்டை அழித்து இந்நாட்டை நிர்மாணித்தது போன்று பல இடங்களில்  அரசாங்க தரிசு நிலங்களையும் விவசாயத்துக்குத் திறந்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப்  போதிய ஊக்கமளிக்காத அன்றைய இந்திய அரசியல்வாதிகள்  இடைத்தரகர்களுடன்  சேர்ந்து கொண்டு இந்திய சமூகத்திற்கு சேரவேண்டிய  நிலத்தை மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து விட்டனர்.

இன்று, வழங்கப்படவுள்ள  நிலம் சில இலட்சம் வெள்ளிகளுக்கு மேல் மதிப்புடையது.  அதற்கான  உறுதி கடிதம் வழங்கியவுடன் கட்ட வேண்டிய பிரிமியத் தொகையைச் செலுத்தி விட்டு நிலத்தில் மீண்டும் பயிரிடத் துவங்க வேண்டிக் கேட்டுக்கொண்டார். பாதையில்லை, காடாக இருக்கிறது,  மேடாக இருக்கிறது என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிருந்தால், இந்த நிலம் மீண்டும் கைநழுவி போய் விடும். கடந்தக் காலத்தில் பல இடங்களில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை இப்படித்தான்  இழந்தனர் என்றார்.

அதே நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதால் மாநிலம்  முழுவதிலும்  முழு நில பிரிமியத்தைச் செலுத்த முடியாதவர்களின் நலனுக்காக வெறும் ஆயிரம்  வெள்ளியை மட்டும் கட்டி நில உரிமத்தைப் பெற்றுக்கொள்ளச் சில சலுகைகளை இன்றைய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. அதனை மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும், அவசரப்பட்டு அதை விற்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

[அணா பாக்கியநாதன்]

TAGS: