அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது.
அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து இந்த அறிக்கை வருகிறது.
வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் ஒரு உண்மையான மற்றும் தெளிவான ஆபத்தைத் தோற்றுவிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நகர்வுகள் சிறிய அளவிலான, இலகுவான மற்றும் பல தரப்பட்ட அணு குண்டுத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்படும் என்று வடகொரியாவின் ராணுவ தளபதிகள் கூறினர்.
குவாம் தீவிலிருந்தும், அமெரிக்க பிரதான நிலப்பரப்பிலிருந்தும் அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறப்பதை வட கொரியா கடுமையாக ஆட்சேபித்துள்ளது.
ஆனால் வட கொரியாவுக்கு அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் திறன் இல்லை என்றாலும், இந்த பிரதேசத்தில் அதன் இலக்குகளை, வடகொரியா தாக்க முடியும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
-BBC