பக்கத்தானில் இந்தியர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

 

Pakatan logo-The Threeநாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு விட்டன. தேர்தல் ஆணையம் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் கூட்டத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அதன் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும். ஆக, அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

13 ஆம் பொதுத் தேர்தலில் மோத விருக்கும் பாரிசான் மற்றும் பக்கத்தான் கூட்டணிகள் அவற்றின் சார்பில் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இங்கும் அங்குமாக சில வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், முழு பட்டியலும் இன்னும் இரு தரப்பிலிருந்தும் வெளிவரவில்லை.

பாரிசான் கூட்டணியின் சார்பின் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள், குறிப்பாக மஇகா வேட்பாளர்கள், எண்ணிக்கை சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு கூட எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.

ஆனால், பக்கத்தான் கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்த நம்பத்தகுந்த தகவல் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருக்கும் மலேசியர்கள் பக்கத்தான் சீன, இந்திய வேட்பாளர்கள் எண்ணிக்கை எப்படியிருக்கும் என்று வினவத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஎபி 10 நாடாளுமன்ற மற்றும் 16 சட்டமன்ற தொகுதிகளையும், பிகேஆர் 5 நாடாளுமன்ற மற்றும் 16 சட்டமன்ற தொகுதிகளையும் இந்திய வேட்பாளர்களுக்கு ஒதுக்கின.

இம்முறை இரு தரப்பினரும், அதிலும் அம்னோ, இந்திய வாக்காளர்கள் மீது அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்திய வாக்காளர்கள் பல தொகுதிகளில் வெற்றியாளரை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதால், இந்த அளவுக்கு அவர்கள்மீது அக்கறை காட்டப்படுகிறது. ஆனால், அம்னோ இந்திய வேட்பாளர்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானதாகும்.

இதற்கும் அப்பால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறலாம். கடந்த காலங்களில் நடந்த பொதுத் தேர்தல்களில் இந்திய சமூகத்தினர் காட்டிய ஆர்வத்தைவிட நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின், குறிப்பாக இந்திய இளைஞர்களின், ஈடுபாடு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இந்திய முதியவர்களும், பெண்களும் சற்று காரசாரமாகவே தங்களின் பாரிசான் எதிர்ப்பு கருத்தை அச்சமின்றி தெரிவிக்கின்றனர்.

இந்தச் சற்று மாறுபட்ட சூழ்நிலையில், பக்கத்தானில் இந்திய வேட்பாளர்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அது இந்தியர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று பேசப்படுகிறது. பாரிசானால் கடந்த 56 ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை பக்கத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இம்முறை எக்காரணத்திற்காகவும் கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களுக்கு டிஎபியும், பிகேஆரும் ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடாது. அப்படி நடந்தால், எதிர்மாறான விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பாஸ் கட்சி இந்திய மற்றும் சீன வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு தயாராக இருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகவே, பக்கத்தான் தலைவர்கள் இந்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

TAGS: