பாகாங் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு தொழில் கூடத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க நிபுணர் குழு ஒன்றை அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு அமைத்துள்ளது.
அந்த அரிய மண் சுத்திகரிப்பு தொழில் கூடத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு அனுமதிகளில்
கூறப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளை அது பூர்த்தி செய்வதை அந்தக் குழு கண்காணிக்கும்.
அவற்றுள் பாதுகாப்பு நடவடிக்கைகள், அவற்றின் தரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் அடங்கும்
லைனாஸ் சுத்திகரிப்பு தொழில் கூடம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய 31 பரிந்துரைகளில்
அத்தகைய குழுவை அமைப்பதும் அடங்கும்.
அந்தக் குழுவுக்கு மலேசிய இரசாயனக் கழகத்தின் தலைவர் சூன் திங் குவே தலைனை தாங்குவார். அதே
வேளையில் பாகாங் மலேசியப் பல்கலைக்கழகத்தின் உதவித் துணை வேந்தர் பத்ருல்ஹிஷாம் அப்துல் அஜிஸ் குழுவின் பேச்சாளராக பணியாற்றுவார்.
அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள்
காணப்படுகின்றன. மற்ற குழு உறுப்பினர்கள் பெயர்களை அது வெளியிடவில்லை என்றாலும் அதில் அரசாங்க அமைப்புக்களைச் சார்ந்த அதிகாரிகளும் அரசு சாரா அமைப்புக்களின் பேராளர்களும் சம்பந்தப்பட்ட மற்ற நிபுணர்களும் இடம் பெறுவர் எனத் தெரிவித்தது.