பிரதமர் நஜிப் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று நிருபிக்கத் தவறி விட்டார்

XavierJayakumar-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 7, 2013.

நேற்று  மாலை புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கில் பாரிசான் நேஷனல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் நஜிப் தனது உரையின் இறுதியில் தனது சொந்தக் கட்சிக்காரர்களைப் பார்த்து  யாரை நம்புகிறீர்கள், இந்நாட்டின் பிரதமராக வர நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அவரா, அன்வாரா அல்லது  ஹாடி அவாங்கா  என்று கேட்டார். சொந்தக் கட்சிக்காரர்கள் எப்படி அன்வாரையோ, ஹாடி அவாங்கையோ நம்புவதாகக் கூற முடியும்?

பினாங்கில் நடந்ததைப் போன்று பொது இடத்தில் பொது மக்களைப் பார்த்து நஜிப்தான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரா என்று கேட்டிருந்தால் மக்கள் இல்லை என்று துணிவாகச் சொல்லியிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மலேசிய மக்களின் நம்பிக்கை நாயகனாக  நஜிப் இருக்க வேண்டும் என்பதே எல்லா மலேசியர்களின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அவர் அப்படி நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளாமல் நாட்டு மக்களை ஏமாற்றி வருவதால், மக்கள் எப்படி அவரை நம்ப முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கையே!

பிரதமரிடம்  அதிகமாக எதையும் கேட்க விரும்பவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியினராக இருந்தாலும், எங்களுக்கும் அவரே பிரதமர். ஆனால் கரைபடிந்த கரங்களுடைய ஒரு மனிதரை பிரதமர் என்று கௌரவமாக ஏற்று கொள்ளத் தேசப்பற்று மிக்க எந்த மலேசிய குடிமகனால் முடியும்? அவர் மீதும், அவர் சகாக்கள் மீதும் சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சிலவற்றைப் பாருங்கள்.

பிரதமரின் ஸ்கோர்பியன்  நீர்மூழ்கி ஊழல்! கம்பளி வியாபாரி தீபக் ஜெய்கிஷன் பிரதமர் மனைவிக்குnajib ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கியதாகக் கூறிய குற்றச்சாட்டு. பிரதமர் துணைவியார் மீதான வைர மோதிரம் கொள்முதல் குற்றச்சாட்டு, பிரதமர் மகளின்  அயல் நாட்டுத் திருமணச் செலவு, சிலாங்கூர் அம்னோ தலைவியின் தகுதியற்ற அவான் மெகா நிறுவனத்திற்குப் புஸ்பனாஸ் இராணுவக் குத்தகை, பேரா மாநில ஆட்சி கவிழ்ப்பு, நிறைவேற்றாத 6 புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான வாக்குறுதிகள், இராணுவ நோக்கத்துக்காகப் பெற்ற நிலத்தைத் தனியார் நிறுவனத்துக்கு மாற்றிவிடப் பிரதமர் அனுமதித்தது, அல்தான்துயா கொலையில் தீபக் ஜெய்கிஷன் குற்றச்சாட்டு, அல்தான்துயா கொலையில் பி.பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரகடனம், அதனைத் தயாரிக்கப் பிரதமர் உத்தரவிட்டார் என்ற வழக்குரைஞர் சிசில் அப்ராஹாமின் ஒப்புதல், செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்திற்கு  2010ம் ஆண்டு அளித்த நிறைவேற்றாத வாக்குறுதி என்று எண்ணில் அடங்காத குற்றச்சாட்டுகளை  இக்குறுகிய காலத்தில் பிரதமர் சுமந்து வருகிறார்.

அதே போல், அவரின் அரசாங்கமும், பாரிசான் முதலமைச்சர்கள் மற்றும்  அமைச்சர்களும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவற்றில் சில, அமாட் சர்பினி, தியோ மெங் ஹொக், அமினுல் ரசீட் அம்சா கொலை, சிறைச்சாலை திடீர் மரணங்கள்,  தமிழ்ப்பள்ளி மானிய ஒதுக்கீட்டில் முறைகேடுகள், சபா அம்னோவுக்கு வந்த  4 கோடி ஹோங்கோங் பணம், சரவா முதலமைச்சர் தாயிப் முகமாட்டின் வெளிநாட்டு முதலீடு, இலட்சக்கணக்கான வெள்ளி செலவில் மலாக்கா முதலமைச்சர் மகனின் திருமணம்,  ஷரிசாட் மாட்டுத் தீவன ஊழல், அன்னியர்களுக்கு அடையாளப் பத்திரம், வாக்காளர்  பட்டியலில் அன்னியர்கள், அம்னோவின் கைப்பாவையாகச் செயல்படும் தேர்தல் ஆணையம், பிரதமர் இலாகா முன் ம.இ.காவின்  குண்டர் தனம், அரசாங்கச் சேவைகள் தனியார் மயத்தால் ஏற்படும் இழப்பு, டோல் கட்டண உயர்வு, சிலாங்கூர் அம்னோ தலைவருக்குச் சொந்தமான ஷபாசின்  ஏற்பாட்டில் குடிநீர் தட்டுப்பாடும், கட்டண உயர்வும், நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் குலைவு, சிலாங்கூரில் சாலை, வடிகால்  மேம்பாட்டுக்குச் செலவிட வேண்டிய மத்திய அரசின் மானியம் மாயம், ஏஇஎஸ் தனியார் மயமாக்கப்பட்ட சாலைப் போக்கு வரத்து  குற்றக் கண்காணிப்பு காமிரா, அதன் அபராதம், லங்காட் 2 திட்டத்திற்கு  ஜப்பானிய வங்கி கடன், மரண இரயில்வே இழப்பீடான ரிம 2700 கோடி இரத்த நன்கொடை என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தத் தேர்தலுக்கு முன்பே கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலளித்து தான் ஒரு தூய்மையான மனிதர் என்பதை  மக்களிடம் நிருபித்து இருக்க வேண்டும். நாட்டுக்காகவே ஒரு பிரதமரேயன்றி, பிரதமருக்காக நாடில்லை. ஆக, நாட்டின் கௌரவமே மக்களுக்கு முக்கியம்.

மலேசிய மக்களே அவரை மன்னித்தாலும், மேற்கூறிய ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி டாக்டர் மகாதீர் மற்றும் அவர் கூட்டத்திடம் நஜிப் பதவியை பறிகொடுக்க மாட்டார் என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இல்லை.

அண்மையில் பிரதமருக்கு மகாதீரின்  “சிலாங்கூரை மீட்காவிடில் பிரதமரை தூக்குவோம்” என்ற எச்சரிக்கையை பாரிசானிலுள்ள நஜிப்பின் ஆதரவாளர்களுக்கே மிரட்டலாக இருக்கும்போது பொது மக்களின் நிலை எப்படியிருக்கும்! ஆக, இவர் ஒரு பலவீனமான பிரதமராக இருப்பதனால் நாட்டுக்கு இன்னும் பெரிய இடர் வந்து சேரும். நாட்டுக்கு நஜிப்பால் நன்மையில்லை.

TAGS: