சில முடிவுகள் தப்பாக போனதற்காக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதெல்லாம் எல்லா நிறுவனங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.
“ஒரு நிறுவனம் என்றால் சிலர் ஒத்துப்போவார்கள், சிலர் ஒத்துப்போக மாட்டார்கள்.
“அதைப் பற்றிப் பரவாயில்லை. நம் போராட்டத்தைத் தொடர்வோம்”. அந்தாராபோஸ் என்ற புதிய வலைப்பதிவில் அவரது தலைமைத்துவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருத்துகள் இடம்பெற்றிருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
நேற்று அந்த இணையத்தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தி, பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு, சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து காலிட்டைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் மே மாதம் கொடுத்ததாகக் கூறியது.
அடைவுநிலையில் சிலாங்கூர் தலைமைத்துவம் பினாங்கின் டிஏபி தலைமைத்துவத்தைவிட பின்தங்கியிருப்பதாக அந்த மகஜரில் குறைகூறப்பட்டுள்ளதாம்.
AntaraPos.com என்ற அந்த வலைப்பதிவு செய்தியாளர்களும் அன்வார்-ஆதரவு மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஒன்று என்று கூறப்பட்டாலும் அது அவரது கட்சியைக் குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
நேற்றிரவு கோலாலம்பூர் கம்போங் பாருவில் ஒரு ‘செராமா’வில் கலந்துகொண்ட காலிட்டைச் சந்தித்த மலேசியாகினி இது பற்றி அவரிடம் வினவியதற்கு, இவ்விவகாரங்கள் குறித்து பிகேரில் விவாதிக்கப்பட்டதாகவும் இது அக்கட்சி ஒரு திறந்தநிலைக் கட்சி என்பதைக் காண்பிப்பதாகவும் கூறினார்.
“யாரும் பேசலாம், ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், எல்லாவற்றுக்கு (பிகேரில்) இடமுண்டு”, என்றார்.
ஆனால், கட்சிக்குள் மந்திரி புசார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் பிகேஆர் மாநாட்டின்போது மகஜர் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றியும் தமக்குத் தெரியாது என்றாரவர்.
“எந்தவொரு அமைப்பானாலும் ஆதரவாளர்களும் எதிர்ப்பா;ளர்களும் இருக்கவே செய்வார்கள்.இது இயல்பானதே”, என்றவர் வலியுறுத்தினார்.
காலிட்டின் அரசியல் செயலாளர் ஃபாக்கே உசேன், காலிட்டை காலிட்டின் செல்வாக்கு மேலோங்கி வருவதைப் பொறுக்கமாட்டாத அம்னோதான் அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது என்றார்.
“அந்த வலைப்பதிவை நடத்தி வருபவர் (மாநில அரசுதொடர்புள்ள) தொடர்புக்கழகம் சென், பெர்ஹாட்(சிசிஎஸ்பி)டின் முன்னாள் பொது நிர்வாகி. கடந்த ஜூன் மாதத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவுற்றது. அவரைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
“எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அந்த வலைப்பதிவு அம்னோவின் ஆதரவைப் பெற்றுள்ளது.அது துணைப் பிரதமர் முகைதின் யாசினிடமிருந்து பகிரங்கமான போட்டியை எதிர்நோக்கியுள்ள (பிரதமர், அம்னோ தலைவர்) நஜிப்புக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் எனப் பணிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்”, என்றார்.
சிசிஎஸ்பி என்பது சிலாங்கூர் டிவியை நடத்திவருவதுடன் சிலாங்கூர்கினி என்னும் மாதாந்திர அரசு செய்திமடல் ஒன்றையும் வெளியிட்டுவரும் ஒரு நிறுவனமாகும்.