உங்கள் கருத்து : ‘பக்காத்தான், இண்ட்ராபின் செயல்திட்டத்தில் உள்ளதை எடுத்துக்கொண்டால் அது கருத்தைத் திருடிக்கொண்டது என்பார்கள். அதையே பிஎன் செய்தால் இணைத்துக்கொண்டது என்பார்கள்’
பிஎன் எங்கள் கோரிக்கைகள் சிலவற்றைத் தத்தெடுத்துக்கொண்டது என்கிறது இண்ட்ராப்
குய்கோன்போண்ட்: இண்ட்ராப் அதன் கோரிக்கைகளை பிஎன் “பரிசீலிப்பதாக”க் கூறியதும் மகிழ்ச்சி அடைவதும் அதே வேளை டிஏபி-இன் பிரகடனத்தைக் கடுமையாகக் குறை சொல்வதும் ஏனென்று எனக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் டிஏபி-இன் பிரகடனத்தில் இண்ட்ராபின் பெரும்பாலான கோரிக்கைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இண்ட்ராப் அமைதியாக உண்மை நிலவரத்தைக் கண்ணோட்டமிட வேண்டும்.
பேச்சுமூச்சு இல்லை: இண்ட்ராப் ஆலோசகர் என். கணேசன் அவர்களே, பிஎன்னைப் பாராட்டுவதும் டிஏபியைப் போட்டுத் தாக்குவதும் ஏன்?
உங்கள் கூற்றுப்படி பிஎன் இண்ட்ராபின் செயல்திட்டத்தின் சில பகுதிகளை அதன் கொள்கை அறிக்கையில் இணைத்துக்கொண்டிருக்கிறது. அதை நீங்கள் ஆராயப்போவதாகக் கூறுகிறீர்கள். உங்கள் செயல் திட்டத்தை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையே அப்புறம் அதில் ஆராய என்ன இருக்கிறது?
அதே நேரத்தில், டிஏபி அதன் கேலாங் பாத்தா பிரகடனத்தில் அந்தச் செயல் திட்டத்தின் பல பகுதிகளைச் சேர்த்துக்கொண்டதைக் “கருத்துத் திருட்டு” என்றீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. உங்கள் போக்கு புரிகிறது.
பிஜன்: பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில், சமூகத்தின் முக்கிய விவகாரங்களில் ஒன்றான நாடற்றவர்களாக உள்ள 350,000 இந்தியர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே. ஆனால், பக்காத்தான் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்க, இண்ட்ராப் இப்போது அதன் செயல்திட்டத்தை பிஎன் தத்தெடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. வேடிக்கைதான் போங்க!
இண்ட்ராப் செயல்திட்டத்தில் உள்ள 18 கோரிக்கைகளில் 14 டிஏபியின் கேலாங் பாத்தா பிரகடனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ‘காப்பி அடித்திருக்கிறார்கள்’ என்று வருணித்தீர்கள்.
பிஎன் சிலவற்றைத்தான் சேர்த்துக்கொண்டது. அதை ஆராய்வோம் என்கிறீர்கள். ஏனய்யா, இந்த இரட்டை நியாயம்?
திரு : இண்ட்ராப் செயல்திட்டத்தின் பெரும்பகுதியை பக்காத்தான் சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. அதை “காப்பி அடிப்பு” என்கிறார்கள். அதையே பிஎன் செய்யும்போது “இணைத்துக்கொண்டார்கள்” என்கிறார்கள். ஏன் இந்த மாறுபாடு?
டிபிஎன் : இண்ட்ராப் பிஎன்னுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டும். அதன்பின் என்ன கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். திருந்தவே மாட்டார்கள், ஐயா.
எச்பி: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருந்தால் மட்டும் போதுமா. அது பிரச்னைகளைத் தீர்க்காது. இதுதான் சிறுபான்மையினரை வேலையாள்களாகவே (மண்டூர்களாக என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) வைத்துக்கொள்ள்ளும் பிஎன் திட்டமாகும். பிஎன் மேலாதிக்கத்தில் இன உறவுகளில் தாராளமயமான கொள்கை கடைப்பிடிக்கப்படும் அறிகுறி தெரியவில்லை.
அப்சலோம்: பிஎன்னின் இன அடிப்படையிலான அரசியலையும் அதன்கூடவே வரும் தீமைகளையும் அழிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு சந்தர்ப்பவாத கும்பல் வந்துள்ளது. பிஎன்னுடன் கமுக்கமாக ஏதோ ஏற்பாடு செய்துகொண்டிருப்பார்கள்போல் தெரிகிறது.
பிசிஐஎம்: இண்ட்ராப் இவ்வளவு வெகுளியாகவா இருப்பது?. 55 ஆண்டுகள் இந்தியர்கள் புறக்கணிப்பட்டு வந்திருக்கிறார்கள். இனியும் பிஎன்னை நம்புவதா? பக்காத்தானுடன் ஒத்துழைப்பதே மேல்.
ரஹ்மான் பூத்தே: மலாய்க்காரர்களாகிய நாங்களும் இண்ட்ராப் செயல்திட்டத்தை ஆதரிப்பது முக்கியம்தான். இந்திய மலேசியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் திட்டம் அது. எந்தக் கட்சி அதை ஏற்றுக்கொண்டுக் கொண்டு செயல்பட்டாலும் அதை நாம் ஆதரிக்க வேண்டும்.