தேர்தல் ஆணையம் (இசி) வேட்புமனு தாக்கல் செய்யும் நாளையும் வாக்களிக்கும் நாளையும் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏப்ரல் 3-இல் நாடாளுமன்றத்தைக் கலைத்த நாளிலிருந்து பினாங்குக்குத் தேர்தல் களை வந்துவிட்டது. பரப்புரை தூள் பறக்கிறது.
ஏப்ரல் 5-இல், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பக்காத்தான் மாநிலம் முழுக்க செராமாக்களுக்கு ஏற்பாடு செய்துவரும் வேளையில் பிஎன், கடந்த மாதத்திலிருந்தே இலவச விருந்துகளைத் தடபுடலாக நடத்தி வருகிறது.
பிஎன் கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாக புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதி குடியிருப்பாளர்கள் கூறினார்கள். சில விருந்து நிகழ்வுகளில் பரிசுப் பொருள்களும் வழங்கப்படுவதாக தெரிகிறது.
இந்த இலவச விருந்துகள் போக, பல சந்தைகளில் 1மலேசியா குலுக்குச் சீட்டுகளும் அன்றாடம் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு நாளும் 200பேர் குலுக்குமுறையில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு ரிம500 மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெறுக்கிறார்கள்.
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில், கெபூன் பூங்கா, பூலாவ் திக்குஸ், தஞ்சோங் பூங்கா ஆகியவற்றில்தான் இந்நடவடிக்கைகள் அமர்களமாக நடந்து வருகின்றன. என்ஜிஓ-களும் குடியிருப்பாளர் சங்கங்களும் அவற்றை ஏற்பாடு செய்கின்றன. ஒரு வணிகர்தான் இந்நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதாகத் தெரிகிறது. அவருக்கு மேலிடத்துடன் அணுக்கமான தொடர்பு இருக்கிறதாம்.
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியும் பூலாவ் திக்குசும், தஞ்சோங் பூங்காவும் டிஏபி வசமுள்ளன. கெபூன் பூங்கா-வை பிகேஆர் வைத்துள்ளது.
பிஎன்னின் இந்நடவடிக்கைகள் குறித்துக் கருத்துரைத்த டிஏபி, வாக்குகளைப் பெற எதிரிகள் பண அரசியலில் ஈடுபடுவதாகவும் இதனால் பினாங்கில் பக்காத்தான் தோற்றுப்போகும் அபாயம் உள்ளது என்றும் கூறியது.
2008 தேர்தலில் செலவிட்டதைவிட பத்து மடங்கு அதிகமான பணத்தை பிஎன் செலவிட்டு வருவதாக செய்தி கிடைத்திருக்கிறது எனப் பராமரிப்பு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் கூறினார்.
“அவர்கள் பணம் கொடுத்தால் மக்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள். அது பக்காத்தானுக்குத்தான் ஆபத்தாக முடியும்”, என்று லிம் குறிப்பிட்டார்.
“யாரோ ஒருவர் பிஎன் தேர்தல் பரப்புரைக்கு சுமார் ரிம 10 மில்லியன் கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். இது பக்காத்தானைப் பாதிக்கும். நாங்கள் தோற்றும் போகலாம்”, என்றவர் எச்சரித்தார்.
“அம்மனிதர், முன்பு இப்படிச் செலவு செய்ததில்லை. இப்போது பக்காத்தானைக் கவிழ்ப்பதற்காக இப்படிச் செய்து வருகிறார்”, என்றாரவர்.
“பண அரசியலின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். மக்களிடம், பணத்தால் கொண்டுவரப்படும் மாற்றம் நல்லதல்ல என்பதை எடுத்துரைக்க வேண்டும். புத்ரா ஜெயாவில்தான் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம், பினாங்கு அரசில் அல்ல என்பதையும் அவர்களிடம் சொல்லிட வேண்டும்”.
நேற்று, தேர்தலில் டிஏபி-இன் ராசியான பொருளாகக் கருதப்படும் ‘உபா’ (Ubah) கார்களை அறிமுகம் செய்தபோது லிம் இவ்வாறு கூறினார். மசீச, பாண்டா கரடி பொம்மைகளை அதன் ராசியான பொருளாகக் கருதுகிறது. அது அவற்றை அண்மையில் பொதுமக்களிடம் வழங்கியது.
நேற்றிரவு மலேசியாகினி மவுண்ட் எஸ்கினில் ஜாலான் ஹலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிஎன் “இலவச விருந்து” நிகழ்வு ஒன்றுக்குச் சென்றது. சுமார் 500 பேர் விருந்துக்கு வந்திருந்தனர். பல கலாசாரக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்து அவர்களை மகிழ்வித்தனர்.
‘விருந்துக்கு பிஎன் ஒருங்கிணப்பாளர் நிதியிலிருந்து செலவிடப்படுகிறது’
விருந்துகள் “பணக்கார வணிகர்” கொடுக்கும் பணத்தில் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறப்படுவதை கெராக்கான் புக்கிட் பெண்டேரா ஒருங்கிணைப்பாளர் ஹொங் சீ வெய் மறுத்தார். பிஎன்னின் மற்ற கட்சிகள் நடத்தும் விருந்துகள் பற்றிக் கருத்துரைக்க அவர் விரும்பவில்லை.
தாமும் தம் சகாக்களும் ஏற்பாடு செய்யும் விருந்துகளுக்கு பிஎன் ஒருங்கிணைப்பாளர் நிதியிலிருந்து பணம் கிடைக்கிறது என்றாரவர்.
“இவை, குடியிருப்பாளர்களிடையே உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. அவர்கள் விருந்து நடத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் இங்கு வரும்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை முன்வைக்கிறார்கள். நாங்களும் அவற்றுக்குத் தீர்வுகாண முடிந்தவரை உதவுகிறோம்”, என்றவர் சொன்னார்.
“2007-இல் இருந்தே இப்படிப்பட்ட விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். அதனால் தேர்தலுக்காகவோ வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவோ நடத்தப்படுபவை அல்ல இவை”.
ஹொங் விருந்தில் உரையாற்றியபோது, இணையத்தளங்களில் வரும் செய்திகளை வாசிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தாரைக் கேட்டுக்கொண்டார். அதில் உண்மை எது பொய் எது என்பதைக் கண்டறிய வேண்டும் என்றாரவர்.
பூலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கொய் தெங் ஹாய், தம் தொகுதியில் என்ஜிஓ-கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகள் இப்படிப்பட்ட விருந்துகளை நடத்தி வருவதாகக் கூறினார். அவை பூலாவ் திக்குஸ் பிஎன் வேட்பாளரான ரொவனா யாமுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருதாக அவர் கூறினார்.
“மக்கள் விருந்துக்குச் செல்வதைத் தடுக்க மாட்டோம். ஆனால், அவர்கள் முந்தைய பிஎன் நிர்வாகத்தை பக்காத்தானின் ஐந்தாண்டுக்கால நிர்வாகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.