பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் அம்சங்களை பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இணைத்துக் கொண்டதின் மூலம் நஜிப் அப்துல் ரசாக் ‘வியூகத் தவறை’ செய்து விட்டதாக பிகேஆர் சொல்கிறது.
பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையின் தன்மையைப் பார்க்கும் போது பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என நஜிப் இனிமேலும் கூறிக் கொள்ள முடியாது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
“இதற்கு முன்னதாக அவர் எங்கள் கொள்கைகள் நாட்டைத் திவாலாக்கி விடும் எனக் கூறியிருக்கிறார். இப்போது அந்தக் கொள்கைகள் அமலாக்க முடிந்தவையாகி விட்டன,” என அவர் சொன்னார்.
அந்த நிலையை பிகேஆர் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ‘முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்’ என்றும் ராபிஸி தெரிவித்தார்.
பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் ‘இரண்டு அல்லது மூன்று’ புதிய அம்சங்கள் மட்டுமே உள்ளன. மற்ற எல்லா அம்சங்களும் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பிஎன் வாக்குறுதிகளில் ஆழமில்லை என்றார் அவர்.
“நாங்கள் எங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையில் தெளிவான காலக் கெடுவை வழங்கியுள்ளோம். நிதி நகர்வுகளும் நிர்வாக நடைமுறைகளும் கூறப்பட்டுள்ளன. பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் அவை காணப்படவில்லை,” என்றும் ராபிஸி கூறிக் கொண்டார்.
“ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் டோல் கட்டணத்தை 30 சென் குறைத்தாலும் அது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படக் கூடும். அவர்களுடைய வாக்குறுதிகள் மிகவும் பொதுவாக உள்ளன.”
கொள்கைகளை வகுக்கவும் தகவல்களை பொது மக்களுக்கு வழங்கவும் தாமும் மற்ற கட்சி ஊழியர்களும் கடுமையாக உழைத்துள்ளதாக ராபிஸி மேலும் கூறினார்.
“பிஎன் எங்கள் கொள்கை அறிக்கையின் கூறுகளை பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அறிவாற்றல் நேர்மை இருக்க வேண்டும். எங்கள் கொள்கை அறிக்கையில் வழி வெளியான யோசனைகள் மீது இரு தரப்பு அங்கீகாரம் தேவை.”
அத்தகைய அங்கீகாரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தால் “ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு” முன்பே நல்ல கொள்கைகள் மூலம் மக்கள் நன்மை அடைந்திருக்க முடியும் என்றும் ராபிஸி குறிப்பிட்டார்.