இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87.
சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்கரெட் தாட்சர் பழமைவாதக் கொள்கைகளை கொண்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியாகவும் இருந்தார்.
பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் ஃபாக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.
1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். புரட்சிகரமான பல பொருளாதாரக் கொள்கைளையும் அவர் முன்னெடுத்தார்.
பெருமளவில் அரச நிறுவனங்களை தாட்சர் தனியார்மயப் படுத்தினார்.
தொழிற்சங்கங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுத்தன் விளைவாக ஒரே நேரத்தில் மிகவும் நேசிக்கப்பட்டும், வெறுக்கப்பட்ட தலைவியாக அவர் திகழ்ந்தார்.
சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.